
தமிழகத்தில் கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள 327 நீதிபதிகளின் பணியிடங்களை 2024 மார்ச் 31-ம் தேதிக்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக் கோரியும், கீழ் நீதிமன்றங்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தியும் 2006-ல் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி. பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியார் அடங்கிய அமர்வு கடந்த 9-ம் தேதி விசாரித்தது.
தமிழகத்தில் மொத்தம் அனுமதிக்கப்பட்ட 1,369 கீழமை நீதிபதிகள் பணியிடங்கள் உள்ளதாகவும், அக்டோபர் 11-ம் தேதி வரையில் அதில் 327 (23 சதவீதம்) பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அளித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்ற விபரத்தை, இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், ‘அனுமதிக்கப்பட்ட 349 மாவட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையில் 84 பணியிடங்களும், 364 மூத்த சிவில் நீதிபதிகளில் 77 பணியிடங்களும், 656 ஜூனியர் சிவில் நீதிபதிகளில் 166 பணியிடங்களும் காலியாக உள்ளன எனவும் விஜய் ஹன்சாரியா தெரிவித்தார்.
இதைக்கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, ‘ஜூனியர் சிவில் நீதிபதிகளுக்கான தோ்வு கடந்த 4,5-ம் தேதிகளில் நடைபெற்றுள்ளது. அதன் மூலம் காலியாக உள்ள 166 ஜூனியர் சிவில் நீதிபதிகளின் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடைமுறை டிசம்பர் 31-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
மாவட்ட நீதிபதிகளின் காலிப் பணியிடங்கள் 31 மார்ச் 2024-க்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழக கீழ் நீதிமன்றங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழக தலைமைச் செயலர், சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஆகியோரை சந்தித்து முறையிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் திவாரி, ஆனந்த் கண்ணன் ஆகியோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதேபோல், புதுச்சேரியில் காலியாக உள்ள கீழ் நீதிமன்ற நீதிபதிகளின் பணியிடங்களும் நிரப்பப்பட வேண்டும் என் கூறி வழக்கின் அடுத்த விசாரணையை நவம்பா் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அன்றைய தினம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரம், கேரளம் ஆகிய மாநிலங்களின் கீழ் நீதிமன்றங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் குறித்து விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.