பேரறிவாளன் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி: திணறிய மத்திய அரசு

பேரறிவாளன் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி: திணறிய மத்திய அரசு

பேரறிவாளனை விடுதலை செய்யும் விவகாரத்தில் யாருக்கு அதிகாரம் இருக்கிறது என்று மத்திய அரசுக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி பேரறிவாளன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 4-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நன்னடத்தையுள்ள பேரறிவாளனை விடுதலை செய்வதில் மத்திய அரசுக்கு என்ன பிரச்சினை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மத்திய அரசு முடிவெடுக்காவிட்டால் நீதிமன்றமே முடிவெடுக்கும் என தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுப்பது தொடர்பாக குடியரசுத் தலைவர் முடிவெடுக்கவுள்ளார் என்றார். இது அரசியல் சாசனத்திற்கு முற்றிலும் எதிரானது என தெரிவித்த நீதிபதிகள். வழக்கை மே 2-ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தனர். அதன்படி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பேரறிவாளனை விடுவிக்கக் கோரிய வழக்கில் ஆளுநரின் முடிவு தொடர்பான ஆவணத்தின் நகல் மத்திய அரசு சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், கடந்த முறை 2 முடிவுகளை தேர்வு செய்யக் கூறினோம். ஏதேனும் முடிவு செய்யப்பட்டதா என கேள்வியதோடு, ஆளுநர் சார்பில் மத்திய அரசு ஆஜராகுவது ஏன் என்பதற்கு பதில் அளியுங்கள் என்றும் ஆளுநர் முடிவெடுக்காமல் பல ஆண்டுகள் காலம் தாழ்த்தியது தொடர்பாக என்ன கூற விரும்புகிறீர்கள் என்றும் ஆளுநரின் முடிவு மாநில அரசின் முடிவுக்குள் வருகிறது என்றும் கூறினர்.

மேலும், பேரறிவாளன் விவகாரத்தில் 2 அல்லது 3 ஆண்டுகள் ஆளுநர் முடிவெடுக்கவில்லை என்று தெரிவித்த நீதிபதிகள், அமைச்சரவை முடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா என்றும் நாங்கள் முடிவெடுக்க முடிவு செய்தபோது குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளதாக கூறியுள்ளீர்கள் என்றும் கிரிமினல் வழக்குகளில் மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை எனக்கூறுவது போல் தோன்றுகிறது என்றும் கொலை வழக்கில் மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை என மத்திய அரசு கூறுவதுபோல் உள்ளது என்றும் கூறினர்.

மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணை விவகாரங்கள் மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் வருகிறது என்று தெரிவித்த மத்திய அரசு, குற்றவாளிகளுக்கான கருணை அல்லது நிவாரணம் வழங்குவது மத்திய அரசின் அதிகாரின் கீழ் வருகிறது. இந்த விவகாரம் தமிழக அரசின் வரம்புக்குள் வருகிறதா என்ற கேள்வி பிரதானமாக எழுகிறது. வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள விசாரணை அமைப்பை பொறுத்தே அதிகாரம் தீர்மானிக்கப்படும் என்று தெரிவித்தது.

அதிகாரம் யாருக்கு என்பதை விடுத்து ஆளுநருக்கு சிறப்பு அதிகாரமளிக்கும் 161-வது பிரிவு குறித்து வாதிடுங்கள் என்று தெரிவித்த நீதிபதிகள், 75 ஆண்டுகளில் குற்றவியல் வழக்குகளில் ஆளுநரின் மன்னிப்புகள் அனைத்தும் அரசமைப்புக்கு முரணானதா என்றும் தண்டனை பிரிவு 302 மீது முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டும் இருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பினர்.

நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட சட்டத்தின்படி மத்திய, மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று மத்திய அரசு தெரிவித்தது. 302 சட்டப்பிரிவின் கீழ் இதுவரை வழங்கப்பட்ட மன்னிப்பு அனைத்தும் எப்படி கணக்கில் கொள்ளப்படும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தமிழக அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவிற்கு முழுமையாக கட்டுப்பட்டவர். அமைச்சரவை முடிவை அனுப்பும்போது ஆளுநர் அதன் மீது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை செலுத்த முடியாது. பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தங்களுக்கு அதிகாரம் இருப்பதாக மத்திய அரசு தலையிட்ட பின்னரே குழப்பம் தொடங்கியது என்றார். பொதுவான சட்டப்பிரிவாக இருந்தாலும் எந்த விசாரணை அமைப்பு சம்பந்தப்பட்டுள்ளது என்பதை பொறுத்தேன் அதிகாரம் இருக்கிறது என்று மத்திய அரசு தெரிவித்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பின் தேதியை குறிப்பிடாமல் வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in