30 ஆண்டு சிறை வாசம்: பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்

30 ஆண்டு சிறை வாசம்: பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்

ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் மாதந்தோறும் முதல் வாரத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன், 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன் உள்பட 7 பேர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் தற்போது பரோலில் இருக்கிறார். உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசும், உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு பரோல் நீட்டிப்பை வழங்கி வருகிறது.

இந்நிலையில், 30 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் தன்னை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நிலுவையில் உள்ள நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக பேரறிவாளனுக்கு கடந்த 10 மாதங்களாக தமிழக அரசு பரோல் வழங்கி வந்தது. இதனிடையே பரோல் கிடைத்தாலும் பேரறிவாளன் யாரையும் சந்திக்க முடியாத நிலையில் இருப்பதாகவும், பேரறிவாளன் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டது போல் உள்ளதாகவும், எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்த தீர்மானம் மீது ஆளுநர் முடிவெக்க இயலாது என்றும் குடியரசுத் தலைவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தியே முடிவெக்க முடியும் என்றும் ஏற்கெனவே தண்டனைக் குறைப்பு வழங்கப்பட்டது என்றும் மீண்டும் ஒரு சலுகையை ஏற்படி ஏற்பது என்றும் மத்திய அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.

இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், தண்டனைக் குறைப்பு உச்சநீதிமன்றம் வழங்கியதுதானே. பேரறிவாளன் 30 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். இன்னும் தாமதம் செய்வதை எப்படி ஏற்பது என்று கேள்வி எழுப்பினர். "பேரறிவாளன் விவகாரம் தங்கள் அதிகாரத்தின் கீழ் வரும் போது தமிழக அரசு முடிவெடுக்க முடியாது. சம்பந்தப்பட்ட அரசுதான் விடுதலை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது" என்று மத்திய அரசு வாதிட்டது.

அப்படி என்றால் அது மாநில அரசுதான் என மத்திய அரசின் வாதம் தொடர்பாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். "சிறை விதிகளுக்குட்பட்டு பரோல் வழங்கலாமே தவிர, நிச்சயம் ஜாமீன் வழங்கக்கூடாது" என்று மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. "அதிகாரம் பற்றி பிறகு விசாரிக்கிறோம். இப்போது ஜாமீன் பற்றி விசாரிக்கலாம்'' என்று நீதிபதிகள் கூறினர். 3 முறை பரோல் வழங்கியபோதும் விதிகளுக்குட்பட்டுதான் செயல்பட்டுள்ளதாக பேரறிவாளன் தரப்பு வாதிட்டது.

இதையடுத்து, நீதிபதிகள், பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்குவதில் உச்சநீதிமன்றம் தீர்மானமாக உள்ளது. பலமுறை சிறை விடுப்பில் இருந்தும் பேரறிவாளன் மீது எந்தப் புகாரும் இல்லை. பரோலில் உள்ள பேரறிவாளனுக்கு கட்டுப்பாடுகள் கடுமையாக இருப்பதன் காரணங்களாலும் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள பேரறிவாளனின் உடல்நிலை, கல்வித் தகுதியை கருத்தில் கொண்டும் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் மாதந்தோறும் முதல் வாரத்தில் பேரறிவாளன் ஆஜராக வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in