பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்விகள்

`அமைச்சரவை முடிவுக்கு எதிராக ஆளுநர் சென்றால் மிகப்பெரிய பாதகத்தை ஏற்படுத்தும்'
பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்விகள்

பேரறிவாளன் விவகாரத்தில் முடிவெடிக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது என ஏற்கெனவே தெளிவாகிவிட்டது என்றும் அமைச்சரவை முடிவுக்கு எதிராக ஆளுநர் சென்றால் அது கூட்டாட்சி அமைப்பில் மிகப்பெரிய பாதகத்தை ஏற்படுத்தும் என்றும் உச்ச நீதிமன்றம் அதிரடியாக கூறியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைக்கும் இருக்கும் தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே ஜாமீன் வழங்கிவிட்டது. தற்போது, தனது தாயார் அற்புதம்மாளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், பேரறிவாளவன் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடு பற்றி கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், ஒவ்வொரு பரிந்துரையும் ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி கொண்டிருப்பது ஏன்? என்றும் பரிந்துரைகள் அனைத்தையும் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு ஆளுநர் அனுப்புவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான மோசமான முன் உதாரணம் என்றும் கூறினர்.

பேரறிவாளன் விவகாரத்தில் எந்த அடிப்படையில் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஆவணங்களை அனுப்பி உள்ளார் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஆளுநர் முடிவு எடுக்கும் அதிகாரம் பற்றி ஒவ்வொரு கோப்பையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்று எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் ஆட்சியாளர்கள் எடுக்க கூடிய ஒவ்வொரு முடிவையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா என்றும் வினா எழுப்பினர்.

மேலும் நீதிபதிகள் கூறுகையில், "ஆளுநர் அமைச்சரவை முடிவுக்கு எதிராக சொந்த கண்ணோட்டத்தில் செல்ல தனி அதிகாரமில்லை. உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பின்படி 7 பேர் விடுதலை விவகாரத்தில் அமைச்சரவையே முடிவெடுக்கலாம். அமைச்சரவை முடிவுக்கு எதிராக ஆளுநர் சென்றால் அது கூட்டாட்சி அமைப்பில் மிகப்பெரிய பாதகத்தை ஏற்படுத்தும். பேரறிவாளன் விவகாரத்தில் முடிவெடிக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது என ஏற்கெனவே தெளிவாகிவிட்டது. பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநரை மத்திய அரசு கொண்டு வர வேண்டாம்" என்று கூறி வழக்கு விசாரணையை வரும் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in