கார் பேனட், பைக் சீல், பாட்டிலில் குளிர்பானம்: அடுத்தடுத்து அலர்ட் செய்த அமைச்சர்

கார் பேனட், பைக் சீல், பாட்டிலில் குளிர்பானம்: அடுத்தடுத்து அலர்ட் செய்த அமைச்சர்

தமிழகத்தில் கத்திரி வெயில் தொடங்கியுள்ள நிலையில், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொதுமக்களுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

சென்னை மாநகராட்சி சார்பில் கோடைகால வெப்பம், வெப்ப அலை பாதிப்பு தடுப்பு விழிப்புணர்வு கண்காட்சியை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாநகராட்சி மேயர் ப்ரியா ஆகியோர் தொடக்கி வைத்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன், "வேலூர், மதுரை, கரூர், சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் நிலவுகிறது. எனவே கோடை காலம் முடியும் வரை மக்கள் தண்ணீர் பாட்டிகளுடன் வெளியே செல்லுங்கள். தமிழகத்தில் இன்று முதல் கத்திரி வெயில் தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சர்க்கரை பானங்கள், குறிப்பாக பாட்டில்களில் அடைத்து விற்கப்படுகிற குளிர்பானங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது.

எலுமிச்சை உள்ளிட்ட பல சாறுகளை பகிருங்கள்; அவசியம் இல்லாமல் பகல் 11 முதல் பிற்பகல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். முழு உடலையும் மூடும் வகையில் ஆடைகளை அணிவதன் மூலம் வெப்பத்தில் இருந்து காத்துக் கொள்ளலாம். காலனி இல்லாமல் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். புரதசத்து அதிகமுள்ள உணவுகளை தவிர்த்து பழைய உணவுகளை சாப்பிடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரு சக்கர வாகனங்களில் அல்லது கார்களின் மீது குழந்தைகளை உட்கார வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அண்மையில்கூட சமூக வலைதளங்களில் ஒரு கார் பேனட் மீது ஆம்லெட் போடுவது போலவும், ஒரு இரு சக்கர வாகன சீட் மீது தோசை போடுவது போலவும் வாட்ஸ்அப்பில் பரவிக் கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு வெயிலின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தில் குழந்தைகளை உட்கார வைத்தால் பாதிப்பு ஏற்படும். எனவே, அதையும் தவிர்ப்பது நல்லது.

அதேபோல், கோடை வெப்பத்தில் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் படுக்கைகள் தயார் நிலையில் இருக்கிறது. ஏதாவது பாதிப்பு என்றால் மருத்துவமனையை உடனடியாக அணுகிட வேண்டும். கோடை வெப்பத்தினால் பாதிக்கப்பட்டு மயக்கம் போன்ற நிலை வரும்போது அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் அவர்களின் தலையின் மீது தண்ணீர் ஊற்றினால் பாதிப்பு குறையும். இந்த மாதிரியான முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை கோடை காலத்தில் நாம் செய்வது அவசியமான ஒன்று. கோடை வெப்பத்தில் நிறைய பேர் உயிரிழந்துள்ளனர். பாதிப்பு கூடுதலாகி சரும நோய் போன்ற பாதிப்புகளும் ஏற்பட்டிருக்கிறது. இவைகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்கு இந்த எளிதான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இதனை சிறந்த விழிப்புணர்வாக ஏற்று மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in