குளிர்வித்தது கோடை மழை... திருவாரூர், நாகையில் வெப்பம் தணிந்தது!

குளிர்வித்தது கோடை மழை... திருவாரூர், நாகையில் வெப்பம் தணிந்தது!

கடும் கோடை வெப்பம் நிலவி வரும் நிலையில் இன்று காலை  திருவாரூர், நாகப்பட்டினம் உட்பட பல  மாவட்டங்களில் கோடை மழை பெய்துள்ளதால் வெப்பம் ஓரளவுக்கு குறைந்துள்ளது.

இந்த ஆண்டு தொடக்கம் முதலே தமிழ்நாட்டில் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. பல மாவட்டங்களிலும் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. அதன் காரணமாக நீர் நிலைகளில் நீர் முற்றிலுமாக வற்றிவிட்டது. நிலத்தடி நீரும் கீழே சென்று விட்டது. பல இடங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வனப்பகுதிகளில் வெப்பம் காரணமாக தீப்பிடித்து மரங்கள், புற்கள், செடி கொடிகள் எரிந்து அழிந்து கொண்டிருக்கின்றன.

மிக அதிக வெப்பத்தால் மக்கள் வீட்டை விட்டு பகல் நேரங்களில் வெளியே வர வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கின்றது. தினமும் காலை 9 மணியில் இருந்தே வெப்பத்தின் அளவு கடுமையாக உயர்கிறது. இதனால் மின்விசிறி  அல்லது குளிர்சாதனம் இல்லாமல் இருக்க முடியவில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் டெல்டா பகுதியில் மக்களை குளிர்விக்கும் வகையில் இன்று காலை கோடை மழை பெய்தது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை, ஆதனக்கோட்டை, மங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கோடை மழை சுமார் அரை மணி நேரம் நீடித்ததால் குளிரான சூழ்நிலை உருவானது.

அதேபோல நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேளாங்கண்ணி, நாகூர் உள்ளிட்ட இடங்களிலும் கோடை மழை சுமார் ஒரு மணி நேரத்திற்கு பெய்தது. திருவாரூரில் தேரோட்டம் நடக்கும் நிலையில் அங்கும் காலையில் இதமான கோடை மழை பெய்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் பல்வேறு பகுதிகளில் இன்று காலை கோடை மழை பெய்துள்ளது. இந்த மழை காரணமாக டெல்டா பகுதியில் வெப்பத்தின் அளவு  ஓரளவுக்கு  குறைந்து இதமான சூழ்நிலை நிலவுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in