அதிர்வு
அதிர்வு

இஸ்ரோ மையத்தில் திடீர் சோதனை... சென்னையில் அதிர்ந்த வீடுகள்: அலறியடித்துக் கொண்டு ஓடிய மக்கள்

பழவேற்காடு குடியிருப்பு பகுதிகளில் திடீரென பயங்கரமான வெடிச்சத்தத்துடன் கூடிய அதிர்வு உணரப்பட்டதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் என்ஜின் சோதனை செய்யும் போது ஏற்பட்ட சத்தத்தால் அதிர்வுகள் ஏற்பட்டதாக அதிகாரிகள் அப்பகுதி மக்களைச் சமாதானப் படுத்தியிருக்கிறார்கள்.

இஸ்ரோ
இஸ்ரோ

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவை ஒட்டி சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு. இஸ்ரோ மையத்தில் ஏவப்படும் செயற்கைக் கோள்களைப் பழவேற்காடு பகுதியிலிருந்து தெளிவாகப் பார்க்க முடியும். இந்த நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் திடீரென பயங்கரமான வெடிச்சத்தம் கேட்டிருக்கிறது. வீடுகளிலும் அதிர்வு ஏற்பட்டதை அவர்கள் உணர்ந்தனர்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் அவசர அவசரமாக வெளியேறினார்கள். தெருவில் கூடியிருந்த பொதுமக்கள் வீட்டிற்குள் செல்லவே அச்சப்பட்டனர். இதையடுத்து வருவாய்த் துறையினர் அங்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள இஸ்ரோ மையத்தில் ககன்யான் திட்டத்திற்காக என்ஜின் சோதனை செய்த போது ஏற்பட்ட சத்தத்தால் பழவேற்காடு பகுதியில் அதிர்வு உணரப்பட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக விசாரணை செய்த பொன்னேரி தாசில்தார் ரஜினிகாந்த், “ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ‘ககன்யான்’ திட்டத்திற்காக ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. என்ஜின் சோதனையின் போது ஏற்பட்ட சத்தத்தால் அதிர்வு உணரப்பட்டுள்ளதே தவிர, நில அதிர்வு எதுவும் இல்லை” என்றார். இதையடுத்து அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in