அடுத்தடுத்து கசிந்த வினாத்தாள்கள்!- தனியார் பள்ளிகள் மீது குற்றவியல் நடவடிக்கை!

தமிழக பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு
அடுத்தடுத்து கசிந்த வினாத்தாள்கள்!- தனியார் பள்ளிகள் மீது குற்றவியல் நடவடிக்கை!

"10, 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் கசிந்த விவகாரத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 தனியார் பள்ளிகளை சேர்ந்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்" என பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள 10ம் வகுப்பு சமூக அறிவியல் மற்றும் பிப்ரவரி 17ம் தேதி நடைபெறும் ஆங்கிலப் பாட வினாத்தாள்களும் முன்கூட்டியே வெளியாகியுள்ளது. இதேபோல் இன்று நடைபெற உள்ள 12-ம் வகுப்பு வணிகக் கணிதம் பாடத்துக்கான வினாத்தாளும், உயிரியல் பாடத்துக்கான வினாத்தாளும் சமூக வலைதளங்களில் கசிந்தது. வினாத்தாள் கசிவு குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் வினாத்தாள் வெளியாகியுள்ளது. வினாத்தாள்கள் வெளியாகி இருந்தாலும் தேர்வு அட்டவணையில் மாற்றம் இல்லை என பள்ளிக்கல்வி ஆணையம் கூறியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வினாத்தாள்கள் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் வந்தவாசி அருகே செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளி மூலம் வினாத்தாள் வெளியாகி உள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாகவும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அத்துடன், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அரசு தேர்வுகள் துறை இணை இயக்குநர் பொன்குமார் நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டார்.

இதனிடையே, "வினாத்தாள்கள் வெளியானது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 தனியார் பள்ளிகளை சேர்ந்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்" என பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியானது தொடர்பாக 2 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் முடிவு செய்துள்ளது. பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இதில் தொடர்பு இருந்தால் அவர்களை பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

Related Stories

No stories found.