தானமாக வழங்கப்பட்ட பசுக்களின் விவரம் வேண்டும்!

ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
தானமாக வழங்கப்பட்ட பசுக்களின் விவரம் வேண்டும்!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குத் தானமாக வழங்கப்படும் பசுக்களைப் பராமரிக்க 10 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்யக் கோரி ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயிலுக்குத் தானமாக வழங்கப்படும் பசுக்கள் பால் கொடுப்பதை நிறுத்திய பின், அவை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும், பூசாரிகளுக்கும் அறநிலையத் துறையால் வழங்கப்படுவதாகவும், அந்தப் பசுக்கள் அடிமாட்டுக்கு விற்கப்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இதை மறுத்த அறநிலையத் துறை தரப்பு, மறுதானம் செய்யப்படும் பசுக்களை முறையாகப் பாதுகாப்பது தொடர்பாக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், பசுக்களின் பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.

மாதிரிப் படம்
மாதிரிப் படம்

தானமாகப் பெறப்பட்ட பசுக்கள் மற்றும் தானமாகக் கொடுக்கப்பட்ட பசுக்களின் விவரங்கள் பதிவுசெய்து பராமரிக்கப்படுவதாகவும், பால் கொடுக்கும் 77 பசுக்கள் கோயிலுக்குள்ளும், பால் கொடுப்பதை நிறுத்திய 74 பசுக்கள் கோயிலில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் நிலம் ஒதுக்கியும் பராமரிக்கப்படுகின்றன என்றும் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்தப் பசுக்கள் அடிமாட்டுக்கு விற்கப்படுவதாகக் கூறுவது தவறு எனவும், கால்நடை மருத்துவர்கள் அந்தப் பசுக்களை அடிக்கடி ஆய்வு செய்துவருவதாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்தது.

அப்போது குறுக்கிட்ட மனுதாரர், கோவில் பூசாரிகளுக்குப் பசுக்களைப் பராமரிக்கும் அளவுக்கு வருமானம் இல்லை என்றார்.

இதையடுத்து, பூசாரிகளுக்குப் பசுக்களை மறுதானம் வழங்குவதை நிறுத்திவிட்டு, அவற்றைக் கோசாலைகளுக்கு அனுப்பலாம் எனத் தெரிவித்த நீதிபதிகள், ஸ்ரீரங்கம் கோயிலுக்குத் தானமாக வழங்கப்பட்ட பசுக்களின் விவரங்களையும், மறுதானம் செய்யப்பட்ட பசுக்களின் விவரங்களையும் தெரிவிக்கும்படி, கோயில் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை இரு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in