செல்போன் கொள்ளையனை விரட்டிப் பிடித்த சிங்கப் பெண்கள்!

சென்னையில் ருசிகரச் சம்பவம்
செல்போன் கொள்ளையனை விரட்டிப் பிடித்த சிங்கப் பெண்கள்!
மாதிரி படம்

சென்னையில் செல்போன் பறித்த கொள்ளையனை மாணவிகள் இருவர் விரட்டிப் பிடித்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது. கல்லூரி மாணவிகளின் இந்தத் துணிச்சலான செயலுக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துவருகின்றனர்.

கல்பாக்கத்தைச் சேர்ந்த காய்த்ரியும், பெருங்களத்தூரைச் சேர்ந்த தீபலெட்சுமி என்பவரும் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்துவருகின்றனர். இவர்கள் பெரம்பூர் லோகோ ஸ்கீம் பகுதியில் வீடு எடுத்து சேர்ந்து வசித்துவந்தனர்.

இவர்கள் இருவரும் லோகோ ஸ்கீம் பகுதியில் நடந்து வந்துகொண்டிருந்தபோது, ஹெல்மெட் அணிந்தபடி பின்னாலேயே நடந்துவந்த வாலிபர் ஒருவர் காயத்ரியின் செல்போனைப் பறித்தார். அத்துடன் தனது நண்பர் தயாராக வைத்திருந்த மோட்டார் சைக்கிளில் ஏறித் தப்பிச் செல்லவும் முயன்றார். எனினும், தீபலெட்சுமியும், காயத்ரியும் துரிதமாகச் செயல்பட்டு, மோட்டார் சைக்கிளில் தாவி ஏற முயன்ற கொள்ளையனைக் கீழே தள்ளிவிட்டனர். கொள்ளையன் நிலைகுலைந்து கீழே விழுந்த அலறல் சத்தம் கேட்ட அப்பகுதிவாசிகள் அவரைப் மடக்கிப் பிடித்தனர். பைக்கைத் தயார் நிலையில் வைத்திருந்த அவரது நண்பர் மட்டும் அங்கிருந்து தப்பிவிட்டார்.

பிடிபட்ட கொள்ளையனை பெரவள்ளூர் காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில் பிடிபட்ட கொள்ளையன் அதேபகுதியைச் சேர்ந்த கார்த்திக்(25) என்பதும், டூவீலரில் தப்பி ஓடிய கூட்டாளி சூர்யா(25) என்பதும் தெரியவந்தது. எப்படியும் நண்பனின் மூலம் போலீஸார் தன்னை நெருங்கிவிடுவார்கள் என்பதைக் கணித்த சூர்யா சிறிது நேரத்தில் அவரே வந்து சரண் அடைந்தார்.

கல்லூரி மாணவிகளின் இந்தத் துணிச்சலான செயல் பலரது பாராட்டுகளையும் குவித்துள்ளது.

Related Stories

No stories found.