'வன்முறையை கைவிட்டு அமைதியாக போராட வேண்டும்' - மாணவியின் தாய் உருக்கம்!

மாணவியின் தாய் செல்வி
மாணவியின் தாய் செல்வி

கனியாமூரில் கலவரம் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில் அனைவரும் வன்முறையை கைவிட்டு அமைதியான முறையில் போராட வேண்டும் என்று மரணம் அடைந்த மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி கேட்டுக் கொண்டுள்ளார்.

சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி அப்பள்ளியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்திருந்தது. ஆனால் மாணவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கடந்த மூன்று தினங்களாக அமைதியான முறையில் போராடி வந்தனர்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் புகுந்த சில அமைப்புகள் மற்றும் கட்சியினர் நேற்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். இன்று சின்னசேலத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கனியாமூரில் உள்ள அந்த பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதை தடுக்க முயன்ற காவல்துறையினர் கல்வீசி தாக்கியதுடன் காவல்துறை வாகனத்தையும் தீவைத்துக் கொளுத்தினர். போலீசாரின் தடுப்புகளை மீறி பள்ளிக்குள் சென்றவர்கள் பள்ளியின் அனைத்து பேருந்துகளையும் தீ வைத்து எரித்தனர். ஜேசிபி டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களுக்கும் தீவைக்கப்பட்டன. பள்ளி சமையலறை, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இருந்த பொருட்கள், மாணவர்கள் சம்பந்தமான ஆவணங்கள் உள்ளிட்டவைகள் வெளியில் கொண்டு வந்து தீ வைத்து எரிக்கப்பட்டன. பள்ளியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை தீ வைத்து எரிக்கப்பட்டன.

கலவரத்தை அடக்குவதற்காக விழுப்புரம், கடலூர், சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த அதிரடிப்படை போலீசார் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு கட்டுக்குள் அடங்காமல் தொடர்ந்து வன்முறையில் ஈடுபடும் போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அனைவரும் வன்முறையை கைவிட்டு அமைதியான முறையில் போராட வேண்டும் என்று மாணவியின் தாய் செல்வி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனது வழக்கறிஞருடன் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது.., “எங்களுக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி. இந்த விவகாரத்தில் அமைதியான முறையிலேயே நீதியை பெற விரும்புகிறோம். எனவே வன்முறையை கைவிட்டு அமைதியாக போராட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். மேலும், "போராட்டத்தில் மாணவியின் உறவினர்கள் யாரும் பங்கேற்கவில்லை, அங்கு வன்முறை வெடித்ததால் அங்கு சென்று கொண்டிருந்த உறவினர்கள் பாதி வழியில் திரும்பிவிட்டனர். அங்கு நடக்கும் போராட்டத்துக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை . போராட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்" என்று மாணவி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in