கழுத்தை நெரிக்கும் கடன் தள்ளுபடிகள்; கடும் நெருக்கடியில் கூட்டுறவு வங்கிகள்!

கழுத்தை நெரிக்கும் கடன் தள்ளுபடிகள்; கடும் நெருக்கடியில் கூட்டுறவு வங்கிகள்!

கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கும் குறைவாக நகைகளை அடமானம் வைத்தவர்கள், இந்த ஆண்டு ரெட்டிப்பு மகிழ்ச்சியில் தீபாவளியைக் கொண்டாடுவார்கள். ஆனால், அவர்களுக்கு கடன் கொடுத்த கூட்டுறவு வங்கிகள் பாடுதான் திண்டாட்டமாகி இருக்கிறது.

ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் கூட்டுறவு வங்கிகள் திக்... திக்... நிலைக்குப் போய்விடுகின்றன. காரணம், அரசியல் கட்சிகள் தங்கள் இஷ்டத்துக்குக் கொடுக்கும் கடன் தள்ளுபடி வாக்குறுதிகள். மக்களிடமிருந்து பெறப்படும் டெப்பாசிட்களைக் கொண்டே கூட்டுறவு வங்கிகள் இயங்குகின்றன. மக்களின் டெப்பாசிட் தொகையிலிருந்து மற்றவர்களுக்குக் கடன் கொடுத்து, அதிலிருந்து கிடைக்கும் வட்டி வருமானத்தில் ஒரு பகுதியை டெப்பாசிட்தாரர்களுக்குத் தந்துவிட்டு இன்னொரு பகுதியை நிர்வாகச் செலவினங்களுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். சங்கிலித் தொடரான இந்த நடவடிக்கைகள் சரியாக நடந்தால்தான், கூட்டுறவு வங்கிகளை செம்மையாக நடத்த முடியும். இதில் எங்காவது தேக்கம் ஏற்பட்டால், நேரடியான சிக்கலை கூட்டுறவு வங்கிகள் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்படியான நெருக்கடியில்தான் இப்போது தமிழக கூட்டுறவு வங்கிகள் இருக்கின்றன.

திமுகவுக்கு வாய்ப்புக் கொடுக்கக்கூடாது என்பதற்காகவே, கடந்த ஆட்சியில் சுமார் ரூ.12 ஆயிரத்து 500 கோடிக்கான விவசாயக் கடன்களை ரத்து செய்வதாக முந்திக்கொண்டு அறிவித்தார்கள். அப்படி அறிவித்து அரசாணையும் வெளியிட்டவர்கள், தள்ளுபடி செய்யப்படும் கடன் தொகையை கூட்டுறவு வங்கிகளுக்கு எந்த விதத்தில் எந்தக் காலக்கெடுவுக்குள், அரசு திருப்பிச் செலுத்தப் போகிறது என்ற விவரத்தை சொல்லவில்லை. அதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நபார்டு வங்கியானது, கடைசி கட்டத்தில் கூட்டுறவு வங்கிகளின் கழுத்தை நெரித்தது.

“தள்ளுபடி செய்யப்பட்டதற்கான கடன் தொகையை செலுத்தாவிட்டால் கூட்டுறவு வங்கிகளுக்கு நிதி உதவி அளிப்பதை நிறுத்திவிடுவோம்” என நபார்டு அலாரம் அடித்தது. அதன் பிறகுதான் ஆட்சியாளர்கள் அலறிப்புடைத்து, சுமார் ரூ. 4 ஆயிரத்து 800 கோடியை மட்டும் முதல் தவணையாக கூட்டுறவு வங்கிகளுக்குத் திருப்பிக் கொடுத்தார்கள். அந்த வகையில் விவசாயக் கடன் தள்ளுபடி விவகாரத்திலேயே இன்னும் சுமார் ரூ. 7 ஆயிரத்து 700 கோடியானது தமிழக அரசிடமிருந்து கூட்டுறவு வங்கிகளுக்கு வரவேண்டிய பாக்கி இருக்கிறது.

இந்நிலையில், அடுத்த அறிவிப்பாக மகளிர் சுய உதவிக் குழு கடன்கள் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டது திமுக அரசு. இதன் மூலம் கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்றிருந்த சுமார் ரூ.3 ஆயிரத்து 700 கோடி கடன் தள்ளுபடி ஆகியிருக்கிறது. இந்தப் பணத்தை அரசு தரப்பில் எப்படி, எப்போது செலுத்தப் போகிறார்கள் என்பதிலும் தெளிவுகள் இல்லை.

இப்போது அடுத்த கத்தியும் கூட்டுறவு வங்கிகளை நோக்கிப் பாய்ந்துவிட்டது. 5 பவுனுக்கும் குறைவாக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்களின் நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய, தமிழக அரசு நவம்பர் முதல் தேதி அரசாணை பிறப்பித்துவிட்டது. இதன் மூலமாகவும் கூட்டுறவு வங்கிகளின் நிதி ஆதாரத்தில் சுமார் ரூ.6 ஆயிரம் கோடிக்கு அடுத்த ஆபத்து வந்திருக்கிறது.

இதற்கு முந்தைய காலக்கட்டங்களில் இதுபோல கூட்டுறவு வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டபோது, அந்தக் கடனுக்கான தொகைக்கு ஆண்டுக்கு 8 சதவீதம் வட்டி கணக்கிட்டு அதை பல்வேறு தவணைகளில் தமிழக அரசு திருப்பிச் செலுத்தி இருக்கிறது. அப்படிச் செலுத்தினாலும் இடைப்பட்ட காலத்தில் வங்கியை திறம்பட நடத்தமுடியாமல் பல சமயங்களில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில், இப்போது ஒரே சமயத்தில் 3 விதமான கடன்களுக்காக சுமார் ரூ.22 ஆயிரத்து 200 கோடிக்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. இது கூட்டுறவு வங்கிகள் வழங்கியிருக்கும் ஒட்டுமொத்த கடனில் 3-ல் ஒருபகுதி என்கிறார்கள்.

இதுகுறித்து காமதேனு இணையத்திடம் பேசிய கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் சங்கத்தினர், “தமிழக கூட்டுறவு வங்கிகளில் மக்களிடமிருந்து டெப்பாசிட்டாக பெறப்பட்ட தொகை சுமார் ரூ.55 ஆயிரம் கோடி இருக்கிறது. அதிலிருந்து கொடுக்கப்பட்ட ரூ.22 ஆயிரத்து 200 கோடிக்கான கடனை தள்ளுபடி செய்துவிட்டால், வங்கி நிர்வாகம் என்னாகும் என்று சிந்தித்துப் பாருங்கள். கடன் தள்ளுபடி அறிவிப்புகளை வெளியிடுவது அரசியல் கட்சிகளின் உரிமை. ஆனால், அதை உரிய காலத்தில் திருப்பிக் கொடுத்து கூட்டுறவு வங்கிகளைக் காக்க வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கு இருக்கிறது.

இன்றைய தேதியில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குக் குறைவான நகைக்கடன்கள் மட்டுமே 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இருக்கிறது. இதில் 3-ல் ஒரு பங்கு தொகை அளவுக்குத்தான் ( 6 ஆயிரம் கோடி) தள்ளுபடி செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது அரசு. இதுவே 16 லட்சம் பேர். இதுபோக எஞ்சிய 2 பங்கு மக்களை பல்வேறு காரணங்களைச் சொல்லி தட்டிக்கழிக்கப் போகிறார்கள். இதனால், அடுத்த சில நாட்களில் கூட்டுறவு வங்கிப் பணியாளர்களை மக்கள் உலுக்கி எடுக்கப் போகிறார்கள். அரசுக்கும் தேவையற்ற கெட்ட பெயர் ஏற்படப் போகிறது.

இது ஒருபுறமிருக்க, தற்போது அரசு அறிவித்துள்ள கடன் தள்ளுபடி வரம்புக்குள் உள்ளவர்களில் பெரும்பகுதியினர் நடுத்தர வர்க்கத்தினர். நகைகளை அடமானம் வைத்து கடன் பெறுவது என்பது இவர்கள் சர்வசாதாரணமாக செய்யும் விஷயம். கடனை தள்ளுபடி செய்து நகைகளைத் திருப்பிக் கொடுத்தாலும் அடுத்த இரண்டே மாதத்தில், மீண்டும் அந்த நகைகளை வைத்து கடன் வாங்கிவிடுவார்கள். இந்தக் கடன்களை ஒரு வருட காலத்துக்குள் அடைத்துவிட வேண்டும் என்பதால், இவர்களில் பெரும்பகுதியினர் இதுவரை நாணயமாக கடனைக் கட்டி நகைகளை மீட்பதும் மீண்டும் கடன் வாங்குவதுமாக இருந்தார்கள். ஆனால், தேர்தல் அறிவிப்பு என்றைக்கு வெளியானதோ அன்றைய தேதியிலிருந்து கடன் தவணையை செலுத்துவதை இந்த மக்கள் நிறுத்திவிட்டார்கள். யார் ஆட்சிக்கு வந்தாலும் கடன் தள்ளுபடி ஆகிவிடும் என்ற நம்பிக்கைதான் அதற்குக் காரணம். இதனால் தமிழகம் முழுவதுமே கூட்டுறவு வங்கிகளில் பணப் புழக்கத்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. அந்த நிலை இப்போதுவரை தொடர்கிறது.

கூட்டுறவு வங்கிகளின் வலுவான நிதி ஆதாரமே சிறு வியாபாரிகள் தான். தீபாவளி நேரத்தில் பத்தாயிரத்தில் தொடங்கி 50 ஆயிரம் வரைக்கும் சிறு சிறு வியாபாரிகளுக்கு கடன் கொடுப்போம். அதை தீபாவளி நேர வியாபாரங்களில் போட்டு லாபம் ஈட்டி கடனை திருப்பிச் செலுத்தும் ஆயிரக் கணக்கான வியாபாரிகள் இருக்கிறார்கள். ஆனால், இம்முறை அப்படியானவர்களுக்கு எல்லாம் எங்களால் கடன் கொடுத்து உதவ முடியவில்லை.

இவ்வளவு ஏன், இப்போது விவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டுத் தொகை கூட்டுறவு வங்கிகளுக்கு வந்திருக்கிறது. அதைக்கூட அவர்களுக்கு முழுமையாக எடுத்துக் கொடுக்கமுடியாத நிலையில்தான் கூட்டுறவு வங்கிகள் இன்றைக்கு இருக்கின்றன. அரசுகள் கடன் தள்ளுபடி செய்வதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், அந்தச் சுமையை கூட்டுறவு வங்கிகளின் தலையில் சுமத்தாதீர்கள் என்றுதான் சொல்கிறோம். ஆகவே, தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகைகளை கூட்டுறவு வங்கிகளுக்கு உடனடியாகத் திருப்பிச் செலுத்த நடவடிக்கை எடுக்கும்படி, முதல்வருக்கும் நிதித் துறை செயலருக்கும் ஊழியர் சங்கங்கள் சார்பில் கடிதம் கொடுத்திருக்கிறோம். மற்றவர்களின் கோரிக்கைகளை விரைவாக கவனிக்கும் தமிழக அரசு, இதையும் விரைந்து கவனித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்” என்றார்கள்.

Related Stories

No stories found.