
உக்ரைனில் நடத்தப்படும் போரை நிறுத்த வேண்டும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்து ட்விட்டரில் கவிதை பதிவிட்டுள்ளார்.
உக்ரைன் மீது கடந்த 24-ம் தேதி முதல் ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனில் 18 ஆயிரம் மாணவர்கள் உள்பட சுமார் 40 ஆயிரம் இந்தியர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.' போரை நிறுத்துங்கள் புதின்' என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள அந்த கவிதை...
மில்லி மீட்டராய்
வளர்ந்த உலகம்
மீட்டர் மீட்டராய்ச் சரியும்
கரும்புகை
வான் விழுங்கும்
பகலை
இருள் குடிக்கும்
கடல் தீப்பிடிக்கும்
குண்டு விழாத நாடுகளிலும்
ஏழைகளின்
மண்பானை உடையும்
ஆயுதம்
மனிதனின் நாகரிகம்:
போர் அநாகரிகம்
போரை நிறுத்துங்கள் புதின்
இப்படி வைரமுத்து ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார். 'கீவ் நகரத்தில் விழுந்த குண்டு, கீரிப்பட்டியின் கீரைக்காரி கூடை உடைக்கும்' என்று ஏற்கெவே உக்ரைன் போர் குறித்து வைரமுத்து ஒரு கவிதையை எழுதியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.