முதல்வரின் கான்வாயை முந்திய டூவீலர் வாலிபர்: விசாரணையில் போலீஸாருக்கு அதிர்ச்சி!

அஜித் குமார்
அஜித் குமார்

சென்னையில் முதல்வரின் வாகன அணிவகுப்பை முந்திச் செல்ல முயன்றவர்களால் போலீஸார் மத்தியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. அதில் ஒருவர் வாகனத்திருட்டில் ஈடுபட்டவர் என்பது தெரிந்ததும் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று மதியம் தலைமை செயலகத்திலிருந்து ஆழ்வார்பேட்டை இல்லத்திற்குச் சென்று கொண்டிருந்தார். முதல்வர் கான்வாய் நேப்பியர் பாலம் வழியாக வேகமாக கடந்து சென்று கொண்டிருந்தபோது போலீஸ் பாதுகாப்பை மீறி வாலிபர் ஒருவர் போர் நினைவு சின்னத்திலிருந்து நேப்பியர் பாலத்தை நோக்கி இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்றார்.

உடனே முதல்வர் கான்வாயில் சென்ற பாதுகாவலர்கள் இது குறித்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து நேப்பியர் பாலம் அருகே பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் சுரேஷ் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த நபரை மடக்கி பிடித்தார். பின்னர் அங்கு வந்த காவல் அதிகாரிகள் நம்பர் பிளேட் இல்லாத அந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த வாலிபரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், சென்னை கே.கே நகர் ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த அஜித்குமார்(22) என்பதும், தனியார் நிறுவன ஊழியர் என்பதும் தெரியவந்தது. அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில் அவர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியிலிருந்து அந்த வாகனத்தை திருடி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அஜித்குமாரை கோட்டை காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல் இன்று காலை ஆழ்வார்ப்பேட்டை அருகே முதல்வர் கான்வாய் வரும் போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் கான்வாயை முந்திச் செல்ல முயன்றார். இதனையடுத்து புரசைவாக்கத்தைச் சேர்ந்த ஹிமாலய் மிஸ்ரா(24) என்ற அந்த நபரை மடக்கிப் பிடித்த தேனாம்பேட்டை போக்குவரத்து போலீஸார்,வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர்.

இப்படி இன்று ஒரே நாளில் இரண்டு இடங்களில் முதல்வர் கான்வாயை முந்தி செல்ல முயன்ற சம்பவங்களால் பதற்றமடைந்த போலீசார் கான்வாய் செல்லும் வழியில் போலீஸ் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த உத்தரவிட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in