தேசிய மனித உரிமை ஆணைய பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள மாநில அரசு மறுக்க முடியாது: உயர்நீதிமன்றம்

உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்

தேசிய மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என மாநில அரசு மறுக்க முடியாது சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கில் கடந்த 2008-ம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் மாணவர்களுக்கிடையே நடைபெற்ற மோதல் சம்பந்தமாக தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்திருந்ததாக தெரிவித்துள்ளார். புகாரில் மாணவர்கள் மோதலை தடுக்காமல் வேடிக்கை பார்த்த காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

புகாரை விசாரித்த தேசிய மனித உரிமை ஆணையம், மாநில மனித உரிமை ஆணையத்திடம் உரிய நடவடிக்கை எடுக்க உத்தர விட்டதாக சுட்டிக்காட்டி உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்ததற்காக தன் மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்த காவல்துறையினர் தாக்கியதாகவும், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்ததாக தெரிவித்துள்ளார். புகாரை விசாரித்த தேசிய மனித உரிமை ஆணையம், ஐபிஎஸ் அதிகாரி அருண் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமைச்செயலாளருக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியன்,கே.குமரேஷ்பாபு முன்பு விசாரணை வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள்,

பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தேசிய மனித உரிமை ஆணையத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளதாகவும், ஆனால் முழு அமர்வு உத்தரவுப்படி பரிந்துரையை ஏற்றுக்கொள்ள முடியாது என கூற முடியாது என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், பரிந்துரையை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள நீதிபதிகள், மனுதாரரின் புகார் குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உரிய நடவடிக்கை எடுத்து, அது குறித்தான அறிக்கையை வரும் 15-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

புகார் குறித்து உரிய நடவடிக்கையை தலைமை செயலாளர்தான் முடிவு செய்து எடுக்க வேண்டும் என்றும், அவர் நடவடிக்கை எடுப்பது குறித்த பதிலை வரும் 15-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in