தமிழகத்திற்கு படையெடுக்கும் இலங்கை தமிழர்கள்

தமிழகத்திற்கு படையெடுக்கும் இலங்கை தமிழர்கள்

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு வந்த வண்ணம் இருக்கின்றனர்.

இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்சவும், பிரதமராக ராஜபக்சவும் இருக்கின்றனர். ஆட்சியாளர்களின் தவறான பொருளாதார கொள்கையால் அந்நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். குடும்பம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வீதிகளில் போராடி வருகின்றனர் பொதுமக்கள். பிரதமர் ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவை அண்மையில் கூண்டோடு ராஜினாமா செய்தது. அதிபர் கோத்தபய பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

நாளுக்கு நாள் போராட்டம் வெடித்து வருவதால் மக்கள் வறுமையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். இதனால், இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் தமிழ்நாட்டை நோக்கி வர ஆரம்பித்துள்ளனர். இதனிடையே, இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு அத்தியாவசிய உதவிகள் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து மத்திய அரசு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

இந்நிலையில். இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 தமிழர்கள் இன்று தனுஷ்கோடி வந்துள்ளனர். அவர்களிடம் கடலோர காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சில நாள்களுக்கு முன்பு 2 குடும்பங்களைச் சேர்ந்த 16 தமிழர்கள் இலங்கையிலிருந்து தமிழகம் வந்தனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அகதிகளாக தமிழகம் வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை தமிழர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in