தமிழக மீனவர்கள் 16 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை!

தமிழக மீனவர்கள்
தமிழக மீனவர்கள்hindu கோப்பு படம்

ஏற்கெனவே 21 மீனவர்கள் இன்னும் விடுவிக்கப்படாத நிலையில், எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி 16 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து இருப்பது மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இருந்து கடந்த வாரம் 2 படகுகளில் கடலுக்கு சென்ற 21 மீனவர்கள், கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்து இருந்தார். இந்தியா வந்துள்ள இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்தும் பேசப்பட்டதாக தகவல் வெளியாகின.

இந்நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 16 தமிழக மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது. அவர்களின் 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தது இலங்கை கடற்படை. அவர்களை விசாரணைக்காக காங்கேசன் துறைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை கடற்படையினரின் தொடர் அட்டூழியங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனிடையே, தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இலங்கை அரசு ஏலத்தில் விட்டு வருகிறது. இதனை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இலங்கை கடற்படையினர் மேலும் 16 மீனவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து 3 விசைப்படகுகளை பறிமுதல் செய்தது ராமேஸ்வரம் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in