ஓய்வுபெறும் வயது குறைப்பு; பத்திரங்களாக பணப்பலன்கள்?

போராடத் தயாராகும் அரசு ஊழியர்கள்!
ஓய்வுபெறும் வயது குறைப்பு; பத்திரங்களாக பணப்பலன்கள்?

ஜனவரி 1 முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வுபெறும் வயது மீண்டும் 58 ஆகக் குறைக்கப்படும் என்ற செய்திகள் சமூக ஊடகங்களில் அலையடிக்கின்றன. நிதிச்சுமையை சமாளிக்க ஓய்வூதியப் பலன்களைப் பத்திரங்களாகக் கொடுக்கவும் தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் தடதடக்கின்றன. அரசு தரப்பில் இதுவரை இதற்கு மறுப்போ ஆமோதிப்போ சொல்லப்படாததால், அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

சதீஷ்குமார்
சதீஷ்குமார்

பெரும்பகுதியினர், ஓய்வுபெறும் வயது அறுபதாக இருப்பதையே ஆதரித்தாலும் அதை 58 ஆகக் குறைக்க வேண்டும் என்று சொல்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய திருச்சியைச் சேர்ந்த ஆசிரியர் சதீஷ்குமார், ’’தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை மீண்டும் 58 ஆகக் குறைக்க முடிவெடுத்தால், அது மிகச் சரியான நடவடிக்கை தான். நீண்டகாலமாக பணியில் இருக்கும் ஓர் அரசு ஊழியருக்கு சரியான நேரத்தில் பணி ஓய்வு வழங்குவதன் மூலம், வேலைக்குக் காத்திருக்கும் பல லட்சக்கணக்கான இளைய தலைமுறையினருக்கு வழிவிட முடியும்.

இப்போதைக்குப் பணப்பலன்களை வழங்க முடியாது என்பதற்காகவோ, சலுகைகாட்ட வேண்டும் என்பதற்காகவோ ஓய்வுபெறும் வயதைக் கூட்டினால், இளைஞர் சமுதாயம் தளர்ந்து போய்விடும். 55 வயதைக் கடந்தும் பணியில் இருக்கும் சீனியர்களிடம் உரிய வேலைத் திறனையும் எதிர்பார்க்க முடியாது. அதுமட்டுமல்லாது, இன்றையச் சூழலில் ஒருவருக்குப் பணி ஓய்வு கொடுத்தால் புதிதாக 3 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடியும். அதன் மூலம் வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கையையும் வெகுவாகக் குறைக்கமுடியும். இதையெல்லாம் கணக்கில் கொண்டு அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை தமிழக அரசு மீண்டும் 58 வயதாக குறைக்கும் என நம்புகிறோம்” என்றார்.

அன்பழகன்
அன்பழகன்

அகில இந்திய மாநில அரசு ஊழியர்கள் சம்மேளனத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஏ.டி.அன்பழகன் இதுகுறித்து கூறும்போது, ‘’ஓய்வுபெறும் வயதை 58 ஆகக் குறைத்து புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பதையே நாங்களும் விரும்புகிறோம். அதேநேரத்தில், தமிழ்நாட்டில் அரசு அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் 16 லட்சம் என்ற நிலையில் தற்போது அதில் 6 லட்சம் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. அவற்றை நிரப்ப வேகமான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பாமல் அதற்குப் பதிலாக அவுட்சோர்சிங் முறையிலும், ஒப்பந்த அடிப்படையிலும் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவது ஏற்கத்தக்கதல்ல.

அதேபோல், ஓய்வுகால பணப்பலன்களை பத்திரமாக வழங்குவதையும் ஒருபோதும் ஏற்கமாட்டோம். ஏனென்றால், அது வெறும் பணப்பலன் மட்டுமல்ல; பல்லாண்டு கால எங்களது உழைப்பின் வியர்வை. ஓய்வுகாலத்தின் முக்கியமான கடமைகளுக்கும், பாதுகாப்பான ஜீவாதாரத்துக்குமான உத்தரவாதம். எனவே, அரசு அதைப் பணமாகவே கொடுக்க வேண்டும்” என்றார்.

பணப்பலன்களை பத்திரமாக வழங்குவது உறுதியானால், ஓய்வு பெறுவோர், விஆர்எஸ் கொடுப்போருக்கு மட்டுமல்லாது பணியின்போதே மரணமடையும் ஊழியர் குடும்பங்களுக்கான நிதியும் பத்திரங்களாகவே கொடுக்கப்படலாம். அவர்களுக்கான பணிக்கொடை போன்றவையும் பத்திரங்களாகவே வழங்கப்படலாம். இதெல்லாம் தங்களுக்கு உரிய காலத்தில் உரிய பயனைத் தராது என்பதே, ஓய்வுபெறும் நிலையில் இருப்பவர்களின் அச்சமாக இருக்கிறது.

ஜாக்டோ ஜியோ போராட்டம்
ஜாக்டோ ஜியோ போராட்டம்

அதேநேரம், ஓய்வுபெறும் வயதைக் குறைத்து பணப்பலன்களை பத்திரங்களாக வழங்குவதால், அரசுக்கு நிதிச்சுமை கூடத்தான் செய்யுமே தவிர குறையாது என்றும் அரசு ஊழியர்களே கணக்குப்போட்டுச் சொல்கிறார்கள்.

60 வயதில் ஓய்வு பெறுவோருக்கு பணப்பலன்களை பணமாக வழங்குவதால் அரசுக்குச் செலவு 2% என்று வைத்துக் கொண்டால், பத்திரமாக வழங்கினால் அது 1% ஆகக் குறையும். ஆனால், ஓய்வுபெறும் வயதை 58 ஆகக் குறைத்தால், 60 வயதில் பணிபுரிந்து கொண்டு இருப்பவர்கள், 59 வயதில் பணிபுரிபவர்கள், 58 வயது நிறைவடைகிறவர்கள் என 3 பிரிவினர்கள் ஒரேநேரத்தில் ஓய்வுபெற வேண்டும். ஒரு பிரிவினருக்கு 2 சதவீதம் என்றால், 3 பிரிவினருக்கும் ஓராண்டு செலவு 6 சதவீதமாக உயரும். பத்திரமாக வழங்கினால், ஒரு பிரிவினருக்கு ஒரு சதவீதம் என்ற ரீதியில் 3 பிரிவினருக்கும் சேர்த்து ஓராண்டுக்கு 3 சதவீதமாக அரசுக்கு செலவு இருக்கும்.

ஆக, ஓய்வுபெறும் வயதை 58 ஆகக் குறைத்து பணப்பலன்களை பத்திரமாக வழங்கினால், அரசுக்கு செலவு 3 சதவீதம் என்ற நிலையில் ஓய்வுபெறும் வயது 60 ஆகவே இருந்து பயன்களை பணமாக வழங்கினால், அரசுக்கு செலவு வெறும் 2 சதவீதம்தான் ஆகிறது. எனவே, ஓய்வுபெறும் வயதை 58 ஆகக் குறைத்தால் அரசுக்கு செலவு குறையாது; மாறாக, கூடவே செய்யும் என்பதாக இருக்கிறது அரசு ஊழியர்கள் தரும் புள்ளிவிவரக் கணக்கு.

பணப்பலன்கள் விவகாரத்தில் சில அரசு ஊழியர்கள் சங்கங்களைச் சேர்ந்தவர்கள், இப்போதே அரசுக்கு எச்சரிக்கை மணியும் அடிக்கத் தொடங்கிவிட்டார்கள். “எப்போதுமே அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் திமுகவுக்கு சாதகமாகவே இருக்கிறார்கள். இம்முறை துரைமுருகன் ஜெயிச்சதே தபால் ஓட்டுகளால் தான் என்பதை முதல்வர் மறந்துவிடக் கூடாது. 2003- ல், இதேபோல் பணப்பலன்களை பத்திரங்களாக வழங்கலாம் என ஜெயலலிதா அரசு எடுத்த முடிவை கடுமையாக எதிர்த்தார் கருணாநிதி. தந்தை எதிர்த்ததை மகன் ஆதரிக்கலாமா? 2003-ல் அரசு இந்த முடிவை எடுத்தபோது, நாங்கள் போராட்டம் நடத்தி அதைப் பின்வாங்கச் செய்தோம். பணப்பலன்களை பத்திரங்களாக வழங்கும் திட்டத்தை திமுக அரசு கைவிடவில்லை என்றால், 2003-ல் எடுத்த முடிவைத்தான் நாங்கள் இப்போதும் எடுக்கவேண்டி இருக்கும்” என்று அவர்கள் எச்சரிக்கிறார்கள்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்த விவகாரம் குறித்து அரசுத் துறை வட்டாரங்களில் விசாரித்தால், “ஓய்வுபெறும் வயதைக் குறைக்கும் திட்டமும் அரசின் பரிசீலனையில் உள்ளது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், செய்தியாளர் சந்திப்பொன்றில் எதார்த்தமாக தெரிவித்த கருத்தை வைத்துக்கொண்டு, இந்த விவகாரம் அரசு ஊழியர்கள் மத்தியில் பிரதானமாகப் பேசப்படுகிறது. ஆனால், இந்த நிமிடம் வரை அதற்கான உறுதியான நிலைப்பாடு ஏதும் எட்டப்படவில்லை என்பதே உண்மை.

எனினும், ஓய்வுபெறும் வயதைக் குறைப்பது பற்றியும் பணப்பயன்களை பத்திரங்களாக வழங்குவது குறித்தும் துறை சார்ந்த வல்லுநர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டு வருகிறது. ஆனால், எத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும் ஊழியர்களின் நலனையும் அரசின் நிதிநிலையையும் கருத்தில் கொண்டுதான் முடிவுகள் எட்டப்படும்” என்கிறார்கள்.

இந்த விவகாரத்தில், அரசு என்ன சொல்லப்போகிறது என்பதை அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஆவலுடன் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in