இன்று மெகா தடுப்பூசி முகாம்: மறக்காமல் பூஸ்டர் ஊசி போட்டுக்கொள்ளுங்கள்!

தடுப்பூசி முகாம்
தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் இன்று நடைபெறும் 33-வது கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் சென்னையில் மட்டும் 2,000 முகாம்கள் செயல்படுகின்றன. பூஸ்டர் ஊசி செலுத்திக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் தவறாமல் இன்று முகாம்களுக்குச் சென்று போட்டுக்கொள்ளலாம்.

தமிழகம் முழுவதும் இதுவரை 32 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. இன்று 33-வது முகாம் மாநிலம் முழுவதும் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஒரு லட்சம் இடங்களில் காலை ஏழு மணி முதல் இரவு 7 மணி வரை இந்த முகாம் நடைபெறுகிறது. இதில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2,000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் சென்னையில் இதுவரை நடைபெற்ற தடுப்பூசி முகாம்கள் மூலமாக இதுவரை 40 லட்சத்து 34 ஆயிரத்து 207 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இன்றைய தடுப்பூசி முகாமுக்காக ஒரு வார்டுக்கு 10 முகாம்கள் வீதம், 200 வார்டுகளில் 2 ஆயிரம் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் காவல் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டம், இந்திய மருத்துவ சங்கம் மற்றும் தெற்கு ரயில்வே துறை சார்ந்த அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் 47 லட்சத்து 97 ஆயிரத்து 719 பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தகுதியுடையவர்கள் என ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. இதில் இதுவரை 4 லட்சத்து 34 ஆயிரத்து 244 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் 43 லட்சத்து 63 ஆயிரத்து 475 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. அவர்களை இலக்காக கொண்டு இன்றைய முகாம்கள் செயல்படுகின்றன.

மாநிலம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சமுதாய நல மையங்களில் செப்டம்பர் 30-ந் தேதி வரை பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும். எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாகச் செலுத்திக்கொள்ளலாம் என்று தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in