
தமிழகத்தில் உள்ள பழமையான பொதுக் கட்டிடங்களை அவற்றின் பழமை மாறாமல் புதுப்பிக்க சிறப்பு ஒதுக்கீடாக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகத் தனது பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். தமிழ் வளர்ச்சித் துறைக்கு 82.86 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசு நிலங்களில் சர்வே பணிகள் துல்லியமாகவும் எளிதாகவும் மேற்கொள்ள தொடர்ந்து இயங்கும் தொடர்பு நிலையங்கள் அமைக்கப்படும் என்றும், இப்பணிகளை நவீன நில அளவையாளர்களுக்கு ரோவர் கருவிகள் வழங்கப்படும் என்றும் கூறிய அவர், இத்திட்டத்துக்காக 15 கோடி ரூபாய் வழங்கப்படுவதாக அறிவித்தார். பரவலான சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கக்கூடிய வகையில் அரசு நிலங்களின் பயன்பாடு அமைவது அவசியம் எனக் கூறிய அவர், அரசு நிலங்கள் குத்தகை முறையில் தற்போது உள்ள சிக்கல்களைத் தீர்க்கவும், அரசு நிலங்களை நியாயமான, வெளிப்படையான முறையில் குத்தகை விடுவதற்கும் வழிவகுக்கும் வகையில் விரிவான நிலக் குத்தகைக் கொள்கை வகுக்கப்படும் என அறிவித்தார்.
நீர்நிலைகள் உள்ளிட்ட அரசு நிலங்களை மீட்டெடுக்கவும், பாதுகாக்கவும், ஆக்கிரமிப்பிலிருந்து அரசு நிலங்களை மீட்கவும் பராமரிக்கவும் சிறப்பு நிதியாக, 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அவர் அறிவித்தார்.