சென்னையில் வந்துவிட்டது தனிப்புலனாய்வு பிரிவு! 12 காவல் நிலையங்களில் துவக்கம்

சென்னையில் வந்துவிட்டது தனிப்புலனாய்வு பிரிவு! 12 காவல் நிலையங்களில் துவக்கம்

சென்னையில் 12 காவல் நிலையங்களில் தனிப்புலனாய்வு பிரிவு உருவாக்கப்பட்ட நிலையான உத்தரவை சென்னை காவல் ஆணையர் பிறப்பித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் கொலை வழக்கில் அளிக்கப்பட்ட தண்டனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தனிப்புலனாய்வு பிரிவை காவல்துறை அமைப்பது தொடர்பாக அறிவுறுத்தல் வழங்கி இருந்தனர். தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சென்னை மற்றும் கோவையில் தனிப்புலனாய்வு பிரிவு அமைக்கப்பட்டது தொடர்பாக அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பித்தது. தமிழக அரசின் செயல்பாட்டை பாராட்டும் வகையில் நீதிமன்ற உத்தரவை மேற்கொண்ட தமிழக டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்தது.

சென்னை காவல் ஆணையர் ரத்தோர்
சென்னை காவல் ஆணையர் ரத்தோர்

இந்தநிலையில் தனிப்புலனாய்வு பிரிவு தொடங்குவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு, ஆகஸ்ட் 1ம் தேதியிலிருந்து செயல்பட ஆரம்பிக்கும் என சென்னை காவல் ஆணையர் தெரிவித்திருந்தார். அதன்படி 12 காவல் மாவட்டங்களில் உள்ள ஏழு கிணறு, ராயபுரம், பேசின்பிரிட்ஜ், தரமணி, மாம்பலம், நந்தம்பாக்கம், ஆயிரம் விளக்கு, கீழ்ப்பாக்கம், அபிராமபுரம், சூளைமேடு, பெரவள்ளூர், வளசரவாக்கம் ஆகிய காவல் நிலையங்களில் தனிப் புலனாய்வு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இந்த காவல் நிலையத்தில் உள்ள குற்றப்பிரிவு தனிப் புலனாய்வு பிரிவு என அழைக்கப்படும்.

கொலை, ஆதாய கொலை மற்றும் கொள்ளை, வழிப்பறி, சந்தேக மரணம், துப்பாக்கி, ஆயுதம் மற்றும் வெடிப்பொருள் தொடர்பான வழக்கு, பணத்திற்காக ஆள் கடத்தல், மதம் மற்றும் ஜாதி ரீதி தொடர்பான வழக்கு மற்றும் துணை ஆணையர்கள் கூறும் முக்கிய வழக்குகள் என ஒன்பது விதமான வழக்குகளை இந்த தனி புலனாய்வு பிரிவு கையாளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதியிலிருந்து இந்த வழக்குகள் தொடர்பான அனைத்து முதல் தகவல் அறிக்கை மற்றும் சிறப்பு அறிக்கையை சட்ட ஒழுங்கு பிரிவு, புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுபோன்று சட்ட, ஒழுங்கு பிரிவு பதிவு செய்த வழக்குகள் அனைத்தும் புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டதை அடுத்து தொடர்ந்து அவர்கள் விசாரணையை மேற்கொள்வார்கள். விசாரணை முடிந்த பிறகு இறுதி அறிக்கையை சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் குறிப்பிட்ட காலகட்டத்தில் தாக்கல் செய்து தொடர்ந்து வழக்கு முடியும் வரை புலனாய்வு பிரிவு பார்த்துக் கொள்ள வேண்டும். விசாரணையின் கீழ் உள்ள வழக்குகள் விசாரணை நீதிமன்றத்தின் அனுமதி பெற்று அடுத்த கட்டமாக வழக்கை தொடர்ந்து புலனாய்வு பிரிவு விசாரிக்க வேண்டும்.

தனி விசாரணை பிரிவிற்கு தொடர்புடைய சட்ட, ஒழுங்கு பிரிவானது கைது, சொத்துக்கள் முடக்கம் உள்ளிட்ட விவகாரங்களுக்கு உதவ வேண்டும். மேலும் உதவி ஆணையர் மேற்பார்வையில் செயல்படுத்த வேண்டும். தனி புலனாய்வு பிரிவுக்கு கேஸ் டைரி, மகஜர் மற்றும் முடக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பான மகஜர் நீதிமன்ற பணிகள் சம்மன் அளிப்பது வாரண்ட் கொடுப்பது போன்ற உள்ளிட்ட அனைத்து பணிகளும் செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. தனி புலனாய்வு பிரிவு தொடர்புடைய ஒன்பது விதமான வழக்குகளைத் தவிர மற்ற சட்ட ஒழுங்கு அமலாக்கம் உள்ளிட்ட விவகாரம் மற்றும் சிறப்பு சட்டம் அடிப்படையிலான வழக்குகளில் போனவர்கள் பற்றிய தாக்குதல் தொடர்பான வழக்குகள் ஆகியவற்றை மேற்கொள்ளலாம். தனி புலனாய்வு பிரிவில் பணியாற்றும் காவலர்கள் பாதுகாப்பு பணிக்கு காவல் ஆணையர் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தனி புலனாய்வு பிரிவு தொடர்பான உதவி ஆணையர்கள் கண்காணித்து இரண்டு வாரத்திற்கு ஒருமுறை துணை ஆணையர்களுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். வழக்கு தொடர்பான அரசு வழக்கறிஞர்கள் ஆகியோருடன் கூட்டம் நடத்தி வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கையும் உதவி ஆணையர் ஒவ்வொரு மாதமும் மேற்கொள்ள வேண்டும்.

உதவி ஆணையர்கள் சமர்ப்பிக்கும் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு தனி புலனாய்வு பிரிவு எவ்வாறு செயல்படுகிறது முறையாக விசாரணை நடத்துகிறார்களா? வழக்குக்கு தேவையான ஆவணங்களை நீதிமன்றத்தில் சரியான நேரத்தில் சமர்ப்பிக்கின்றார்களா? இறுதி அறிக்கையை உரிய நேரத்தில் தாக்கல் செய்கிறார்களா போன்ற கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். துணை ஆணையர்கள் தங்கள் காவல் மாவட்டத்தில் உள்ள தீர்க்கப்படாத வழக்குகளை தனி புலனாய்வு பிரிவு ஒப்படைத்து திறம்பட வழக்குகளை முடிக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in