8 ஆண்டுகளில் 228 தொல்பொருட்கள் மீட்பு: வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகள் தமிழகம் வந்தது!

சிலைகள்
சிலைகள்

தமிழகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகள் மத்திய அரசால் மீட்கப்பட்டு தமிழகம் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த சிலைகள் இந்து சமய அறநிலையத்துறை வசம் ஒப்படைக்கப்பட உள்ளன.

தமிழக கோயில்களிலிருந்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு விலை மிகுந்த சிலைகள் கடத்தப்பட்டன. இது குறித்து இந்தியத் தொல்பொருள் துறையினர் அளித்த புகாரின் பேரில் தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட பத்து புராதன சிலைகளை மத்திய அரசு மீட்டது. வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்ட சிலைகள் இந்திய தொல்லியல் துறை வசம் ஒப்படைக்கும் நிகழ்வு கடந்த புதன் அன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் பேசிய மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் கிஷண் ரெட்டி, “வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்ட சிலைகளை மீட்பதில் பிரதமர் மோடி மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். இதன் காரணமாகக் கடந்த 8 ஆண்டுகளில் 228 தொல்பொருட்கள் அமெரிக்கா, ஜெர்மனி, கடனா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளன” என்றார்.

அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த சைலேந்திரபாபு, “அரியலூர் மாவட்டத்தில் கடத்தப்பட்ட விஷ்ணு சிலைகள் உட்படப் பல சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் வெளிநாட்டில் இருக்கும் சிலைகளைக் கொண்டு வரத் தமிழகக் காவல் துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' எனத் தெரிவித்தார். தற்போது அந்த சிலைகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. குழந்தைப் பருவ சம்பந்தர், நடராஜர், விஷ்ணு, ஸ்ரீதேவி, துவாரா பாலகர், சிவன்-பார்வதி சிலைகள் உட்பட பத்து சிலைகளை மத்திய கலாச்சாரத் துறையினர் தமிழக காவல் துறையிடம் ஒப்படைத்தனர். ரயில் மூலம் சென்னை கொண்டு வரப்பட்ட சிலைகள் அனைத்தும் கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு, அதன்பின்னர் இந்து சமய அறநிலையத்துறை வசம் ஒப்படைக்கப்படும் எனக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in