சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் மறுப்பு: காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் மறுப்பு: காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
சிவசங்கர் பாபா

பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபாவுக்கு உடனடியாக ஜாமீன் வழங்க மறுத்த உச்சநீதிமன்றம், எனினும் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்கலாமா என்பது குறித்து தமிழக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறப்பட்டது. இந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் சிவசங்கர் பாபா தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்ட இரண்டு ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவையும் நீதிபதிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதேபோல், மேலும் ஒரு வழக்கில் உடல்நிலையை காரணம் காட்டி ஜாமீன் கோரிய மனுவும் தள்ளுபடியானது. இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரியும் சிவசங்கர் பாபா மேல்முறையீடு தாக்கல் செய்தார்.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது. சிவசங்கர் பாபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'சிவசங்கர் பாபா பல நாட்களாக கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். அவருக்கு ஏற்கெனவே ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வயது மூப்பால் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சிவசங்கர் பாபாவுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்தார்.

இதைத் தொடர்ந்து ஆஜரான தமிழக காவல்துறை தரப்பு வழக்கறிஞர், 'பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிவசங்கர் பாபா குற்றவாளி என்பதற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளது. அவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை அழிக்க வாய்ப்பு உள்ளது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது'என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சிவசங்கர் பாபாவுக்கு உடனடியாக ஜாமீன் வழங்க மறுத்ததோடு, எனினும் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்கலாமா என்பது குறித்து தமிழக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in