சுற்றுலாப் பயணிகளை அசரடிக்க வந்து விட்டது கப்பல் சுற்றுலா: ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சுற்றுலாப் பயணிகளை அசரடிக்க வந்து விட்டது கப்பல் சுற்றுலா: ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாகக் கப்பல் சுற்றுலாவை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த சொகுசுக் கப்பலில் ஸ்பா, ஜிம், பார், நீச்சல் குளம் என பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பாகச் சென்னை துறைமுகத்திலிருந்து புதுச்சேரிக்குச் சென்று மீண்டும் சென்னை துறைமுகம் வரும் வகையில் இரண்டு நாள் சுற்றுலா திட்டமும், சென்னை துறைமுகத்திலிருந்து விசாகப்பட்டினம் வழியாகப் புதுச்சேரி சென்று அங்கிருந்து மீண்டும் சென்னை திரும்பும் வகையில் 5 நாள் சுற்றுலா திட்டம் என இருவகையான பேக்கேஜ்களில் சொகுசு கப்பல் இயக்கப்படவுள்ளது. இரண்டு நாள் சுற்றுலா திட்டத்துக்குக் குறைந்தபட்ச கட்டணமாக இரண்டு நபர்களுக்கு 40 ஆயிரம் ரூபாயும், ஐந்து நாள் சுற்றுலா திட்டத்துக்குக் குறைந்தபட்ச கட்டணமாக இரண்டு நபர்களுக்கு 90 ஆயிரம் ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் சுற்றுலாப் பயணத்தை தொடங்கிய ‘கார்டெல்யா’ கப்பல் 700 அடி நீளமும் 11 தளங்களும் கொண்டது. இந்த கப்பலில் மொத்தம் 796 தங்கும் அறைகள் உள்ளன. சுமார் 1500லிருந்து 2000 பயணிகள் வரை ஒரே நேரத்தில் கப்பலில் பயணம் செய்ய முடியும். மேலும் இவர்களுடன் 800 பணியாளர்கள் கப்பலில் பயணிப்பார்கள். இவை தவிர ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளை ரசிக்கும் வகையில் கலையரங்கம், 4 பெரிய ரெஸ்டாரண்ட்டுகள், மேஜிக் ஷோ, கேசினோ, பார், ஜிம், ஸ்பா, மசாஜ் செண்டர், நீச்சல் குளம், குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி என பல்வேறு சொகுசு வசதிகளும் இடம்பெற்றுள்ளன. கப்பல் சுற்றுலாவைத் தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், அந்த கப்பலில் உள்ள வசதிகளைப் பார்வையிட்டார். இந்த கப்பல் சுற்றுலா வெற்றியடைந்தால், 2025-ல் மூன்று சுற்றுலா கப்பல்கள் இயக்கப்படும் எனத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in