தடுப்பணை நீரில் மூழ்கி 4 சிறுமிகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு

தடுப்பணை நீரில் மூழ்கி 4 சிறுமிகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு
கடலூர் அரசு மருத்துவமனையில்

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே கெடிலம் ஆற்றில் உள்ள தடுப்பணை நீரில் மூழ்கி 4 சிறுமிகள், 3 இளம் பெண்கள் என 7 பேர் உயிரிழந்தனர்.

நெல்லிக்குப்பம் அருகே அருங்குளம் குச்சிபாளையம் எனும் கிராமத்தின் அருகே கெடிலம் ஆறு ஓடுகிறது. அதில் தடுப்பணை ஒன்று உள்ளது. இதில் அப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சென்று குளிப்பது வழக்கம்.

இந்நிலையில், இன்று ஏ.குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த முத்துராமன் மகள் சுமுதா(16), குணால் மகள் பிரியா(17), அமர்நாத் மகள் மோனிகா(15), சங்கர் மகள் சங்கவி(16), முத்துராம் மகள் நவிவிதா(18), அயன் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த ராஜகுரு மகள் பிரியதர்ஷினி(15), அவரது தங்கை திவ்யதர்ஷினி(10) ஆகியோர் கெடிலம் ஆற்று தடுப்பணைக்குச் சென்றுள்ளனர்.

அங்கு ஆழமான பகுதிக்குள் சென்றபோது அவர்களில் இருவர் எதிர்பாராதவிதமாக நீருக்குள் மூழ்கினர். அதனால் அவர்களைக் காப்பாற்றுவதற்காக மற்றவர்கள் பாய்ந்து சென்றனர். ஆனாலும் பயனில்லாமல் அவர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊர் மக்கள் திரண்டுவந்து தடுப்பணையில் குதித்து பெண்கள் மற்றும் சிறுமிகளை மீட்டனர். மீட்புப் பணிக்கு உதவியாக நெல்லிக்குப்பம் போலீஸார் மற்றும் தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்தனர். மீட்கப்பட்டவர்கள் அனைவரும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனாலும் அவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஒரே ஊரைச் சேர்ந்த உறவினரான சிறுமிகள் மற்றும் இளம் பெணகள் 7 பேர் இழந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in