பிப்ரவரி 1 முதல் 20 வரை ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு!

அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
தேர்வுகளை ஆன்லைனில் நடத்தக் கோரி போராடிய கல்லூரி மாணவர்கள்
தேர்வுகளை ஆன்லைனில் நடத்தக் கோரி போராடிய கல்லூரி மாணவர்கள்hindu கோப்பு படம்

நேரடி தேர்வு வைக்க எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராடி வந்த நிலையில், "தமிழகத்தில் பிப்ரவரி 1 முதல் 20ம் தேதி வரை ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும்" என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

செமஸ்டர் தேர்வுகள் கல்லூரிகளில் நேரிடையாக நடத்துவதை விட்டு கடந்த ஆண்டை போல் ஆன்லைனில் தேர்வு நடத்த வேண்டும் என்று தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ஆனால், தமிழக அரசோ, நேரடித் தேர்வுத்தான் நடத்தப்படும் என்று திட்டவட்டமாக கூறியதோடு, தேர்வு நடத்தப்படும் தேதியையும் அறிவித்துவிட்டது. ஆனால், தற்போது தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில், தமிழகத்தில் பிப்ரவரி 1ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரி, அரசு மற்றும் தனியார் கலைக்கல்லூரி மாணவர்களுக்கு பிப்ரவரி 1 முதல் 20ம் தேதி வரை ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும்.

அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடிhindu கோப்பு படம்

கிராமப்புற மாணவர்கள் அப்லோட் செய்த விடைத் தாள்கள் வந்து சேர்வது தாமதமானாலும் பெற்றுக்கொள்ளப்படும். ஒரு செமஸ்டர் தேர்வில் 4 தாள்கள் எழுத வேண்டி இருந்தால் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அனுப்பலாம். இறுதி செமஸ்டர் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு மட்டும் நேரடி முறையில் தேர்வு நடத்தப்படும். பிப்ரவரி 20ம் தேதிக்கு பின்னர் கரோனா சூழலை பொறுத்து நேரடி வகுப்பு பற்றி முடிவெடுக்கப்படும். சென்னை பல்கலைக்கழகத்தின் தரம் குறித்து வரும் 29ம் தேதி கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசிக்கப்படும்.

ஆன்லைன் தேர்வு முறையில் தவறுகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு பல்கலைக்கழகத்தில் நடத்திய பாடங்களில் இருந்தே கேள்விகள் கேட்கப்படும். கரோனா பரவல் குறைந்த பிறகே நேரடி வகுப்புகள் நடத்தப்படும். மாணவ சங்க பிரதிநிகள் கூறிய கருத்தின்படியே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கல்லூரி முதல்வர், கல்வியாளர்களுடன் ஆலோசித்து பாடத்திட்டங்களில் மாற்றம் செய்யப்படும்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in