
தமிழ் தேசிய செயற்பாட்டளர்களில் ஒருவரான சீதையின் மைந்தன் என்கிற தட்சிணாமூர்த்தி, உடல்நலக் குறைவு காரணமாக நேற்று மாலை காலமானார்.
தமிழ்நாட்டின் தீவிர தமிழ் தேசிய முன்னோடிகளில் ஒருவர் சீதையின் மைந்தன். தட்சிணாமூர்த்தி என்னும் இயற்பெயர் கொண்ட இவர், தமிழர் நிலம், தமிழர் உரிமைகள் தொடர்பான களங்களில் தீவிரமாக இயங்கி வந்தவர். கச்சத்தீவு மீட்புக்கான முன்னெடுப்புகள் பலவற்றையும் இவர் மேற்கொண்டார்.
கச்சத்தீவு உட்பட தமிழர் உரிமைகள் தொடர்பாக பல்வேறு நூல்களையும் இவர் எழுதி உள்ளார். சீமானின் நாம் தமிழர் உள்ளிட்ட தமிழ் தேசியத்தை முன்வைக்கும் கட்சியினர் மற்றும் இயக்கத்தினர் மத்தியில் சீதையின் மைந்தன் கருத்துக்கள் வரவேற்பு பெற்றுள்ளன. மாறாக திராவிட இயக்கத்தினர் மற்றும் பெரியாரிய ஆதரவாளர்கள் இவருடன் கடுமையாக முரண்பட்டிருந்தனர்.
உடல் நலக்குறைவு காரணமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சீதையின் மைந்தன் மறைவுக்கு சீமான், வேல்முருகன், மு.களஞ்சியம் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். சீமான் வெளியிட்ட பதிவில், "தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளரும், தமிழியப் பேரியக்க நிறுவனருமான ஐயா சீதையின் மைந்தன் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். தமிழர் உரிமைகள் பறிபோவதைத் தடுக்க பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து களம் கண்ட ஐயா சீதையின் மைந்தன் அவர்கள் இறுதிநொடி வரை சமரசமற்ற தமிழ்த்தேசியவாதியாகவே வாழ்ந்து மறைந்தவர்.
கட்சத்தீவு மீட்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக சிறப்புற செயலாற்றியதுடன், கட்சத்தீவு குறித்து புத்தகம் எழுதி கட்சத்தீவு தமிழர்களுக்கு சொந்தமான பூர்வ நிலம் என்பதை தக்க வரலாற்றுச் சான்றுகளுடன் நிறுவியவர். தமிழ் மண்ணின், மீதும் மக்களின் மீதும் அளவற்ற பற்று கொண்டு, திராவிட சூழ்ச்சி அரசியலை அம்பலப்படுத்தும் அரும்பணி புரிந்த ஐயா சீதையின் மைந்தன் அவர்களின் இழப்பென்பது தமிழ்த்தேசிய அரசியல் களத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்" என்று தெரிவித்துள்ளார்.
சீதையின் மைந்தன் இறப்பையடுத்து, திருவள்ளூர் நெற்குன்றத்தில் இருக்கும் அவரது இல்லத்தில் இன்று இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளன.