‘வழக்கமாக வரும் காய்ச்சல்தான்; பள்ளிகளுக்கு விடுமுறை தேவையில்லை’ - மா.சுப்பிரமணியன் திட்டவட்டம்

‘வழக்கமாக வரும் காய்ச்சல்தான்; பள்ளிகளுக்கு விடுமுறை தேவையில்லை’ -  மா.சுப்பிரமணியன் திட்டவட்டம்

‘காய்ச்சல் காரணமாக அதிக அளவில் குழந்தைகள் பாதிக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். எனவே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை’ என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் ஏராளமான குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுப்பு வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் எழுந்தன. கூடவே, மருந்து தட்டுப்பாடுகள் உள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக அலுவலகத்தில் நேற்று மாலை அதிகாரிகளுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை நடத்தினார். 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் அத்தியாவசியமான மருந்துகள் போதிய அளவில் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளன. ஆனால் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகச் சிலர் தவறான தகவலைப் பரப்பி வருகிறார்கள். மருந்து தட்டுப்பாடு இருக்கிறது எனப் புகார் இருந்தால் 104 உதவி எண்ணில் அழைக்கலாம். சம்பந்தப்பட்டவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும். கரோனாவுக்கு முன்பு எவ்வளவு இருந்ததோ அந்த அளவுக்குத்தான் குழந்தைகளுக்கான காய்ச்சல் தற்போதும் உள்ளது. 

எச்1என்1 காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 282 பேர் என்ற நிலையிலிருந்தது. இன்றைக்குக் கூடுதலாக 41 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 10 பேர் இதுவரை இந்த காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளனர். காய்ச்சல் காரணமாகத் தமிழகம் முழுவதும் 4,740 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு இதே தேதியில் 5,000-க்கும்  மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். எனவே இது இயல்பான ஒன்றுதான். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அளவுக்குக் காய்ச்சல் பாதிப்பு இல்லை. ஆகையால் தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க வேண்டிய சூழல் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in