ஜெயா நினைவிடத்திற்கு நாளை மறுநாள் செல்கிறார் சசிகலா!

அதிமுகவில் அடுத்து நடக்கப் போவது என்ன?
ஜெயா நினைவிடத்திற்கு நாளை மறுநாள் செல்கிறார் சசிகலா!

சிறையிலிருந்து விடுதலையானதும் ஜெயலலிதா நினைவிடம் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட சசிகலா நாளை மறுநாள் (அக். 16) கட்டாயம் செல்லவிருக்கிறார்.

ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார். பிறகு கடந்த ஜனவரி மாதம் சிறையிலிருந்து விடுதலையானார். சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலாவுக்குத் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பெங்களூரில் இருந்து சாலை மார்க்கமாக வந்த சசிகலாவுக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் நேராக ஜெயலலிதா நினைவிடம் செல்லுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் திநகரில் உள்ள தனது இல்லத்திற்குச் சென்று விட்டார். பின்னர் சசிகலா ஜெயலலிதா நினைவிடத்திற்குச் செல்ல உள்ளதாகத் தகவல்கள் வெளியானது.

சசிகலா வருகையால் கலக்கம் அடைந்த அதிமுக தலைமை ஜெயலலிதா நினைவிடத்தில் புனரமைப்பு பணிகள் நடப்பதால் பொதுமக்கள் பார்வையிடத் தடைவிதிப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதனால் ஜெயலலிதா நினைவிடத்துக்குச் செல்லும் நிகழ்வை சசிகலா தவிர்த்து வந்தார்.

சசிகலா வெளியே வந்த உடன் கட்சியை கைபற்றி விடுவார் என்ற அச்சத்திலிருந்த அதிமுகவின் சில முக்கிய நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டி சசிகலாவுக்கு எதிராகத் தீர்மானங்களை நிறைவேற்றினர். இதனால் அதிமுகவில் குழப்பம் அதிகரித்ததை அடுத்து திடீரென அரசியலில் இருந்து விலகுவதாக சசிகலா அறிவித்தார். இது அவரது ஆதரவாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அறிவிப்பால் சில அதிமுக தலைமை நிர்வாகிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இதற்கிடையில் திடீரென சசிகலா தொண்டர்களிடம் உரையாடும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. அதில், ”விரைவில் நான் வருவேன்... தொண்டர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். அதிமுக என்ற பேரியக்கத்தை யாரும் அழித்துவிட முடியாது” என்றார் சசிகலா.

இந்நிலையில் சசிகலா, அக்டோபர் 16-ம் தேதி மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா, எம்ஜி.ஆர்., அண்ணா நினைவிடத்திற்குச் சென்று மலர் தூவி மரியாதை செலுத்த இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து சசிகலா சார்பில் முன்னாள் தென் சென்னை மாவட்ட கழக இணை செயலாளர் வைத்தியநாதன் போலீஸ் பாதுகாப்பு கேட்டுக் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில், ”அக்டோபர் 16 ஆம் தேதி காலை 10 மணியளவில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., அண்ணா நினைவிடத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா செல்ல இருப்பதால் தகுந்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 17 ஆம் தேதி ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., இல்லத்திற்கு சசிகலா செல்ல உள்ளதால் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு மனு அளித்துள்ளனர்.

சசிகலா ஜெயலலிதா நினைவிடம் செல்ல உள்ளதால் ஆட்களைத் திரட்டும் பணியில் ஆதரவாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் அதிமுக அதிருப்தி நிர்வாகிகளும் பங்கேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. சசிகலாவின் வருகையால் அதிமுகவில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in