அரசுக்குத் தெரியாமல் நடந்த சப்பர விழா: காரணம் சொல்லும் அமைச்சர்

அரசுக்குத் தெரியாமல் நடந்த சப்பர விழா: காரணம் சொல்லும் அமைச்சர்

தஞ்சாவூரில் அரசுக்குத் தெரியாமல் நடந்தது தேர்த்திருவிழா அல்ல. சப்பரத்திருவிழா என்று அமைச்சர் சேகர்பாபு விளக்கமளித்தார்.

தஞ்சாவூரில் இருந்து பூதலூர் செல்லும் சாலையில் 4 கிமீ தொலைவில் களிமேடு கிராமம் உள்ளது. இங்கு 150 ஆண்டுகள் பழமையான அப்பர் மடம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் சித்திரை மாத சதய நட்சத்திர நாளில் அப்பர் சதய விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

நேற்று நடந்த விழாவின் ஒரு பகுதியாக இரவு மின் அலங்கார சப்பரத்தில் அப்பர் படம் வைத்து வீதி உலாவாகக் கொண்டு வரப்பட்டது. அதிகாலை கீழத் தெருவிலிருந்து முதன்மைச் சாலைக்கு வந்து தேர் திரும்பியபோது, சப்பரத்தில் அலங்காரத்திற்காக கட்டப்பட்டிருந்த இரும்புக்குழாய் ஒன்று மேலே சென்ற உயரழுத்த மின் கம்பியில் உரசியது. அப்போது கீழே மின் விளக்குகளுக்காக அதிக திறன் கொண்ட ஜெனரேட்டரும் இழுத்து வரப்பட்டது. இரு மின்சாரமும் ஒன்றுக்கொன்று உரசி அதிக மின் அழுத்தத்தால் மின்சாரம் பாய்ந்துள்ளது.

இதில் சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தஞ்சை தேர் விபத்து தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தன. அதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு விளக்கமளித்தார். அப்போது அவர் பேசுகையில், "களிமேடு பகுதியில் நடைபெற்றது தேர்த்திருவிழா அல்ல, அது தேரும் அல்ல. அது சப்பரம். இந்த சப்பரத் திருவிழா அரசுக்குத் தெரிவிக்காமல் ஊர்மக்களாகவே நடத்தியது" என்று தெரிவித்தார்.

தஞ்சாவூர் தேர் விபத்து குறித்து விசாரிக்க வருவாய்த்துறை செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில் ஒருநபர் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in