ஏற்றம் காணும் ரப்பர் விலை: அதிர்ச்சியில் லாரித் தொழிலில் ஈடுபடுவோர்

டயர் ரீட்ரேடிங் கட்டணமும் அதிகரிப்பால் வேதனை
ஏற்றம் காணும் ரப்பர் விலை: அதிர்ச்சியில் லாரித் தொழிலில் ஈடுபடுவோர்

‘ரப்பர் விலை உயர்வால் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் புதிய டயர் மற்றும் பழைய டயர்களை ரீட்ரேடிங் செய்யும் கட்டணமும் ஏற்றம் கண்டு வருவது லாரித் தொழிலில் ஈடுபடுவோரை அதிர்ச்சியடைச் செய்துள்ளது.

சரக்கு வாகனப் போக்குவரத்தில் முக்கிய இடம் பிடிப்பது லாரி. நாடு முழுவதும் லாரிகள் மூலம் உணவுக்கு தேவையான காய்கறிகள், பலசரக்குகள், ஜவுளிப் பொருட்கள், ஆலைகளுக்கு தேவைப்படும் உதிரிப்பாகங்கள், சமையல் மற்றும் வாகன எரிபொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த லாரிகள் இயங்காவிடில் மேற்குறிப்பிட்ட அத்தனை அத்தியாவசியப் பொருட்களின் விலையும் ‘விண்ணை’ முட்டும் அளவுக்கு ஏற்றம் காணும். ஆகையால் நாட்டின் இதயத் துடிப்பு என்று கூட சரக்கு லாரிகள் வர்ணிக்கப்படுகின்றன. இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த லாரித் தொழில் நாள்தோறும் ஏற்றம் காணும் டீசல் விலை, சுங்கச்சாவடி கட்டணம், ஓட்டுநர் பற்றாக்குறை, சரக்குகளை ஓரிடத்தில் இருந்து ஓரிடத்திற்கு கொண்டு செல்வதில் நிலவும் சிரமம் போன்ற பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருகின்றன.

இவற்றையெல்லாம் கடந்து தான் லாரித் தொழிலில் ஈடுபடுவோர் லாபம் பார்க்க வேண்டியுள்ளது. இச்சூழலில் பழைய டயர்கள் ரீட்ரேடிங் செய்வற்கான விலையும் ஏற்றம் கண்டிருப்பது லாரி தொழிலில் ஈடுபடுவோருக்கு பேரிடியாக அமைந்துள்ளது. ரப்பர் விலை உயர்வே இதற்கு காரணம் என டயர் ரீட்ரேடிங் செய்யும் தொழிலில் ஈடுபடுவோர் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு டயர் ரீட்ரேடிங் உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறுகையில், ``கடந்த மூன்று மாத காலமாக டயர் ரீட்ரேடிங் தொழிலுக்கு தேவையான ரப்பரின் விலை படிப்படியாக உயர்ந்து வருகின்றன. மூன்று மாத காலத்தில் சுமார் 30 சதவீம் அளவுக்கு ரப்பரின் விலை ஏற்றம் கண்டுள்ளது. இது மட்டுமன்றி டயர் ரீட்ரேடிங் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் உபரி பொருட்களின் விலை உயர்வாலும் கனரக வாகனங்களின் ஒரு செட் டயர் ரீட்ரேடிங் விலை ரூ.10 முதல் ரூ.15 ஆயிரம் வரை உயர வாய்ப்புள்ளது. லாரிகளுக்கு பயன்படுத்தப்படும் ஒரு செட் (இரண்டு) டயர் ரூ. 40 ஆயிரம் வரை இருக்கும். இந்த டயர் மூலம் 1.50 லட்சம் கி.மீ., தூரம் லாரிகளை இயக்க முடியும்.

அதன்பின் மீண்டும் புதிய டயர் மாற்ற வேண்டும். இது லாரித் தொழிலில் ஈடுபடுவோருக்கு லாபகரமாக இருக்காது. அதனால் ரீட்ரேடிங் செய்யப்பட்ட டயரை லாரித் தொழிலில் ஈடுபடுவோர் அதிகம் பயன்படுத்துவர். ரூ. 8,500 முதல் ரூ. 9 ஆயிரம் வரை ஒரு செட் பழைய லாரி டயர் ரீட்ரேடிங் செய்யப்பட்டு வந்தது. மூலப் பொருட்கள் விலை உயர்வால் ரூ. 10 முதல் ரூ. 15 ஆயிரம் வரை டயர் ரீட்ரேடிங் விலை உயரும். ரீட்ரேடிங் செய்யப்பட்ட டயர் புதிய டயருக்கு இணையாக மைலேஜ் தரும்.

புதிய டயர் 1.50 லட்சம் கி.மீ., தந்தால் ரீட்ரேடிங் டயர் ஏறத்தாழ 1 லட்சம் கி.மீ., மைலேஜ் தரும். கனரக, இலகுரக வாகனங்களின் டயர்களும் ரீடிரேடிங் செய்யப்படும். டயரின் சைசிற்கு தகுந்தாற் போல் ரீட்ரேடிங் விலை இருக்கும். பொதுவாக அடை மழை போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் ரப்பர் மரங்களில் உற்பத்தியாகும் பால் சேகரிப்பதில் சிரமம் நிலவும். அச்சமயங்களில் ரப்பர் தயாரிப்பு பாதிக்கப்படும். அதுபோன்ற சூழல் எதுவும் தற்போது இல்லை. எனினும், ரப்பர் மற்றும் ரப்பர் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் விலை உயர்ந்து வருகிறது. இதன்காரணமாக புதிய டயர் மட்டுமன்றி டயர் ரீட்டிரேடிங் செய்யும் விலையும் உயர்ந்துள்ளது'' என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in