பைக் வாங்க 2.60 லட்சத்தை சில்லறைக் காசுகளாகக் கொண்டு வந்த இளைஞர்!

பிரமிக்க வைத்த சேலம் பூபதி
சில்லறைக் காசுகளுடன் பூபதி.
சில்லறைக் காசுகளுடன் பூபதி.

சேலம் மாவட்டம், அம்மாபேட்டையைச் சேர்ந்த இளைஞர் வி. பூபதி. பி.சி.ஏ படித்த இவர் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவர் பைக் வாங்கிய விவாகரம் தான் சேலம் மாவட்டம் முழுவதும் தற்போது பேச்சாக உள்ளது.

அப்படி ஊரே பேசும்படி என்ன தான் செய்தார் என்று அவரிடம் கேட்டோம். "சொந்தமாக பைக் வாங்க வேண்டும் என்ற கனவு, கல்லூரி காலத்திலேயே எனக்குள் உண்டு. இதற்காக கடந்த மூன்று ஆண்டுகளாக எனக்கு கிடைத்த வருவாயில் ஒரு பகுதியைச் சேர்த்து வந்தேன். அப்போது தான், ஒரு ரூபாய் காயின்களாக் கொடுத்து பைக் வாங்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

இதற்காக நான் சேமித்த 2.60 லட்ச ரூபாயையும் ஒரு ரூபாய் காசுகளாக மாற்ற முயற்சித்தேன். மூன்றரை மாதங்களாக சேலம், நாமக்கல், திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள நண்பர்களின் உதவியோடு ஒரு ரூபாய் சில்லறைக் காசுகளாக 2.60 லட்ச ரூபாயையும் மாற்றினேன். வீட்டில் இவ்வளவு சில்லறைக் காசுகளை வைத்திருந்தால், பெற்றோர் பயந்து விடுவார்கள் என்பதால் சிறு, சிறு மூட்டைகளாக்கி நண்பர்களிடம் கொடுத்து வைத்தேன்" என்றார் பூபதி.

தனது கனவு வாகனத்துடன் பூபதி.
தனது கனவு வாகனத்துடன் பூபதி.

இவ்வளவு சில்லறைக் காசுகளையும் ஷோரூமில் கொடுத்து எப்படி பைக் வாங்கினீர்கள் என்று கேட்டதற்கு, " 2.60 லட்ச ரூபாயையும் ஒரு ரூபாயாக மாற்றியதும் 1,100 கிலோ எடை வந்தது. “என்னது, சில்லறைக் காசுகளா?” என பல ஷோரூம்களில் மிரண்டு போனார்கள். எங்கள் வீட்டருகே உள்ள ஷோரூம் உரிமையாளர் ஒத்துக் கொண்டார். நண்பர்கள் உதவியுடன் மினிடோர் ஆட்டோ மூலம் கொண்டுவரப்பட்ட சில்லறைக் காசுகளை சுமார் 8 மணி நேரமாக எண்ணி அவரிடம் ஒப்படைத்தோம். காசைக் கொடுத்துவிட்டு எனது கனவு பைக்கான ‘பஜாஜ் டாமினர் -400 சிசி’யை ஓட்டிக் கொண்டு வீட்டுக்குப் போனேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய பூபதி, “நான் இப்படி சில்லறையைக் கொட்டு பைக் வாங்கிய விஷயம் ஊர் முழுக்கப் பரவியதால். சில்லறைக்கு தடுமாறிக் கொண்டிருந்த பலரும் ஷோரூமை தேடிவர ஆரம்பித்துவிட்டார்கள். பஸ் கண்டக்டர்கள், மளிகைக் கடைக்காரர்கள், டீக்கடைக்காரர்கள் என பலரும் ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்து சில்லறைக் காசுகளை வாங்கிச் சென்றுள்ளனர். கோயில் நேர்த்திக் கடன் செலுத்தவதற்காகவும் சிலர் சில்லறைக் காசுகளை வாங்கிச் சென்றதாகவும் ஷோரூம் நிறுவனத்தினர் தெரிவித்தனர். மூன்றரை மாதங்களாக நான் சேமித்த சில்லறைக் காசுகள், மூன்றே நாட்களில் பணமாக மாறிவிட்டது" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in