சாதித்த 9 தமிழக விஞ்ஞானிகளுக்கு தலா ரூ.25 லட்சம் பரிசு! பாராட்டு விழாவில் முதல்வர் அறிவிப்பு

விஞ்ஞானிகளுக்கு முதல்வர் பாராட்டு
விஞ்ஞானிகளுக்கு முதல்வர் பாராட்டு

சாதித்த 9 தமிழக விஞ்ஞானிகளுக்கு தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இஸ்ரோவில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விஞ்ஞானிகளான முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன், மயில்சாமி அண்ணாதுரை, வீரமுத்துவேல் உள்ளிட்ட 9 பேருக்கு தமிழக அரசு சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "தமிழக விஞ்ஞானிகளின் பெருமையை போற்றும் விதமாக இரண்டு அறிவிப்புகளை வெளியிடுகிறேன். முதல் அறிவிப்பு, இந்தியாவிற்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை ஏற்படுத்திக் கொடுத்த, இனியும் ஏற்படுத்தி கொடுக்கப் போகிற அறிவியல் மேதைகளான ஒன்பது பேருக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொருவருக்கும் தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்பதை பெருமிதத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அறிவுக்கான அளவுகோல் எதுவும் இல்லை. உங்கள் உழைப்புக்கான அங்கீகாரத்தின் அடையாளம் தான் தமிழ்நாடு அரசு இந்த தொகையை வழங்கி இருக்கிறது. இதை ஏற்றுக்கொண்டு மேலும் மேலும் இந்தியாவிற்கு நீங்கள் பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இரண்டாவது அறிவிப்பு, எனது கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்தை பற்றி உங்களுக்கு தெரியும். தமிழ்நாட்டு மாணவர்கள், இளைஞர்கள் ஏதோ பட்டம் வாங்கினால் மட்டும் போதும் என்று நினைக்காமல் கல்வியில், அறிவாற்றலில், சிந்திக்கும் திறனில், பன்முக திறமையில் சிறந்தவர்களாகத்தான் அவர்களை உருவாக்கத்தான் நான் முதல்வன் திட்டத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகிறோம். கடந்த ஆண்டு மட்டும் 13 லட்சம் பேருக்கு பயிற்சி வழங்கியிருக்கிறோம். 10 லட்சம் நிர்ணயித்தோம். ஆனால் 13 லட்சம் பேருக்கு வழங்கி இருக்கிறோம்.

விஞ்ஞானிகளுக்கு முதல்வர் பாராட்டு
விஞ்ஞானிகளுக்கு முதல்வர் பாராட்டு

நமது மாணவர்களை அனைத்து திறமைகளும் கொண்டவர்களாக வளர்த்து வருகிறோம். பன்னாட்டு நிறுவனங்கள் அதிகமாக தமிழகத்தில் தொழில் தொடங்க வருகின்றன. அதற்கு தகுதியானவர்களாக தமிழ்நாடு இளைஞர்களை உருவாக்கிக் கொண்டு வருகிறோம். அதேபோல் அறிவியல் திறன் கொண்ட மாணவர்களையும் உருவாக்க நினைக்கிறோம். அதற்கான அறிவிப்பை இந்த மேடையில் வெளியிடுவதை நான் பொருத்தமாக கருதுகிறேன். பொறியியல் படிக்கிற மாணவர்களுக்கு அறிவியல் கண்டுபிடிப்பு ஆர்வத்தை உருவாக்க அதை செயல்படுத்த போகிறோம். அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5% இட ஒதுக்கீட்டின்கீழ் அரசின் கல்வி உதவித்தொகையால் இளநிலை படிப்பை முடித்து முதுநிலை பொறியியல் படிப்பை தொடர 9 மாணவர்களுக்கு சாதனை விஞ்ஞானிகள் என்ற பெயரில் ஸ்காலர்ஷிப் வழங்க இருக்கிறோம். இதன் மூலம் அவர்களின் கல்விக் கட்டணம், விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்படும்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in