
தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற ஆட்டு சந்தைகளில் ஒரே நாளில் 21 கோடி ரூபாய்க்கும் மேல் ஆடுகள் விற்பனையாகியுள்ளது.
தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி புத்தாடைகள், பட்டாசுகள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பெரும்பாலான கடைவீதிகள் மற்றும் சந்தைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
தீபாவளி பண்டிகையின் போது அதிகாலையில் அசைவ உணவுகள் சமைப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதற்காக இறைச்சி விற்பனை களைகட்டும் என்பதால் தீபாவளி பண்டிகைக்கு தேவையான ஆடுகள், மாடுகள், கோழிகள் உள்ளிட்டவற்றை வியாபாரிகள் வாங்குவதற்கு மும்முரம் காட்டி வருகின்றனர்.
இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் இன்று ஆடு, மாடு, கோழி சந்தை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கால்நடைகளை அழைத்துக் கொண்டு விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் சந்தைக்கு வந்திருந்தனர்.
திருவண்ணாமலை, சேலம், திருச்சி, கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் கால்நடைகளுடன் வருகை தந்திருந்தனர். செம்மறியாடு, வெள்ளாடு, மரிக்கை என பல்வேறு விதங்களை சேர்ந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக அழைத்துவரப்பட்டிருந்தது.
காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த வார சந்தையில் தற்போது விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. சென்னை, வேலூர், மதுரை, கோவை, சேலம், திருச்சி, ஈரோடு, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் குவிந்துள்ளதால் குந்தாரப்பள்ளி சந்தை களைகட்டி உள்ளது.
கிடா ஆடு அதிகபட்சமாக 10 அயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரையிலும், பெண் ஆடுகள் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஆடு வளர்க்கும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குந்தாரப்பள்ளி சந்தையில் தீபாவளியை முன்னிட்டு 7 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றுள்ளதாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல் விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் நடந்த ஆட்டுச் சந்தையில் 6 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது.
கடலூர் மாவட்டம், வேப்பூர் ஆட்டுச் சந்தையில் 6 கோடி ரூபாய்க்கும் மேல் ஆடுகள் விற்பனை நடைபெற்றுள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள சந்தைகளில் சுமார் 21 கோடி ரூபாய்க்கும் மேல் ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
பயணிகள் அதிர்ச்சி! தீபாவளியையொட்டி... விமான கட்டணங்களிலும் கொள்ளை!
வைகை அணை திறப்பு… 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
ஐயப்பனுக்கு தங்க அங்கி.. சபரிமலையில் இன்று நடை திறப்பு!
செம ஹிட்டு... தீபாவளி கொண்டாட்டம்... 'ஜிகர்தண்டா2' படத்திற்கு முதல் ரிவியூ கொடுத்த பிரபலம்!