ஒரே நாளில் எகிறியது பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை

5 மாநில தேர்தல் முடிவடைந்த நிலையில் மத்திய அரசு அதிரடி
ஒரே நாளில் எகிறியது பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை

5 மாநில தேர்தல் முடிவடைந்த நிலையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் வாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் அண்மையில் சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்தது. பஞ்சாப்பை தவிர்த்து மற்ற 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடித்தது. உக்ரைன்- ரஷ்யா போரினால் ஏற்படும் பாதிப்பை சரி கட்ட பெட்ரோல், டீசல், சமையல் வாயு விலையை மத்திய அரசு உயர்த்த உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இதனை நிரூபிக்கும் வகையில் இன்று 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. அதேபோல் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

137 நாட்களுக்கு பிறகு சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து பெட்ரோல் விலை 102.16-க்கும், டீசல் விலை 77 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.92.19-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்துள்ளனர்.

இதேபோல், 5 மாதங்களுக்கு பிறகு சமையல் எரிவாயு விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 967 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரூ.710க்கும், பிப்ரவரி மாதம் 810க்கும், மார்ச் 1-ம் தேதி 835க்கும், ஏப்ரல் 1-ம் தேதி ரூ.825க்கும், ஜூலை 1-ம் தேதி ரூ.850க்கும், ஆகஸ்ட் 17-ம் தேதி 875க்கும், செப்டம்பர் 1-ம் தேதி 900க்கும், அக்டோபர் 6-ம் தேதி 917க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த சமையல் எரிவாயு விலை இன்று ரூ.967க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஒரு மாதமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தொடர்ந்து உயர்ந்த போதிலும், பெட்ரோல், டீசல் விலையில் மற்றம் செய்யப்படவில்லை. அதேபோல உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நிலவும் போர் காரணமாக ஏற்பட்ட பாதிப்பின் விளைவாக பெட்ரோல், டீசல் விலை அதிக அளவில் உயரும் என வல்லுநர்கள் கணித்திருந்தனர். ஆனால் சமீபகாலமாக விலை உயர்த்தப்படாமல் தொடர்ந்து சில்லறை விற்பனை நடைபெற்றுவந்தது. இந்நிலையில் இன்றைய தினம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலை உயர்த்தப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்து வர கூடிய நாட்களில் மேலும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும் என வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in