எங்கள் 6 பேரையும் விடுதலை செய்யுங்கள்: முதல்வர் ஸ்டாலினுக்கு ரவிச்சந்திரன் உருக்கமான கடிதம்!

எங்கள் 6 பேரையும் விடுதலை செய்யுங்கள்: முதல்வர் ஸ்டாலினுக்கு ரவிச்சந்திரன் உருக்கமான கடிதம்!

பேரறிவாளன் விடுவிக்கப்பட்டது போல் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற எஞ்சியுள்ள 6 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ரவிச்சந்திரன் பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 32 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் இருந்தார். தற்போது பரோலில் விடுதலையாகி தூத்துக்குடி மாவட்டம், சூரப்பநாயக்கன்பட்டியில் வசித்து வருகிறார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், உச்ச நீதிமன்ற உத்தரவில் பேரில் சில நாட்களுக்கு முன்பு சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில், பேரறிவாளனைப் போல் ராஜீவ்காந்தி கொலையில் ஆயுள் தண்டனை பெற்ற தான் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் எனக்கேட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ரவிச்சந்திரன் கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில்," 32 ஆண்டுகளாக சிறையில் உள்ளேன். தற்போது தங்கள் உத்தரவின் பேரில் சிறை விடுப்பில் இருந்து வருகிறேன். இதனால் உடல் நலம் குன்றிய என் வயதான தாயாரை அருகில் இருந்து கவனித்துக் கொள்ள முடிகிறது. இந்த சூழலில், நான் உட்பட 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்யும் தமிழக அரசின் தீர்மானத்துக்கு மூன்றரை ஆண்டுகளாக இசைவு தராத ஆளுநரின் அரசியல் சாசன கடமையை மீறிய செயலைக் கண்டிக்கும் வகையில் பேரறிவாளன் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழக அரசின் 7 பேர் விடுதலை முடிவுக்கு இசைவு தராமல் காலம் தாழ்த்தி வந்த ஆளுநரிடம் மீண்டும் இவ்விவகாரத்தை கொண்டுச் செல்ல விரும்பாத உச்ச நீதிமன்றம், தனது உள்ளார்ந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது.

இதேபோல் தமிழக அரசுக்கும் உள்ளார்ந்த அதிகாரம் உள்ளது. அதன் அடிப்படையில் 7 பேர் முன்விடுதலை தொடர்பாக நான் அனுப்பிய மனு மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எஞ்சியுள்ள நான் உட்பட 6 பேரையும் விடுதலை செய்யும் தீர்மானத்தை, ஆளுநரிடம் அனுப்பாமல் தமிழக அரசுக்குரிய நிர்வாக ஆணை அடிப்படையில் எங்கள் விடுதலையை உறுதி செய்ய வேண்டும்" என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in