தூக்குத் தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைப்பு: பரபரப்பு வழக்கில் முக்கிய தீர்ப்பு

தூக்குத் தண்டனை,  ஆயுள் தண்டனையாக குறைப்பு: பரபரப்பு வழக்கில் முக்கிய தீர்ப்பு
முருகேசன் - கண்ணகி

தமிழ்நாட்டையே பரபரப்புக்கு உள்ளாக்கிய கண்ணகி - முருகேசன் தம்பதி ஆணவக் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த சாமிகண்ணு என்பவரின் மகன் முருகேசன், அதே பகுதியில் வசித்த வேறு சமூகத்தைச் சேர்ந்த துரைசாமி மகள் கண்ணகி என்பவரை காதலித்து, கடந்த 2003 மே 5-ம் தேதி கடலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த கண்ணகியின் உறவினர்கள் முருகேசனின் சித்தப்பா மூலமாக தந்திரமாக இருவரையும் வரவழைத்து மயானத்துக்கு அழைத்துச் சென்று விஷத்தை செலுத்தி கொலை செய்தனர். சடலங்களையும் தனித்தனியாக எரித்தனர்.

இந்த ஆணவக் கொலை வழக்கு , 2004-ம் ஆண்டு இந்த வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. 15 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர். விசாரணை முடிந்து கடலூர் சிறப்பு நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் வழங்கிய தீர்ப்பில் 13 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது. அதில் கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டியனுக்கு தூக்குத் தண்டனையும், மற்ற 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து, கண்ணகியின் குடும்பத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பில் கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டியனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டுள்ளது. ரங்கசாமி, சின்னதுரை ஆகிய இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கண்ணகியின் தந்தை துரைசாமி, காவல் ஆய்வாளர் உள்பட 12 பேருக்கு அளிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in