தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சலுகை!- பொது நிறுவன ஊழியர்கள் அதிர்ச்சி

தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சலுகை!- பொது நிறுவன ஊழியர்கள் அதிர்ச்சி

அரசு ஊழியர்களுக்கு கரோனா சிகிச்சை செலவு ரூ.10 லட்சத்திற்கு மேல் உயர்ந்தால் அரசே வழங்கும் என்றும் வாரியம், பல்கலைக்கழகம், போக்குவரத்து கழகம் உள்ளிட்ட பொது நிறுவன ஊழியர்களுக்கு இது பொருந்தாது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு கட்டணம் ரூ.300 ஆக உயர்ந்துள்ளது. இவை கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. புதிய மருத்துவ காப்பீடு திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளின் படி, அரசு ஊழியர்களுக்கான மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யும் தொகை ரூ.180-இல் இருந்து ரூ.300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்துக்காக யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் 2025 ஜூன் 30ம் தேதி வரை நான்கு ஆண்டுகளுக்கு புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள், குடும்பத்தினர் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு மூலம் சிகிச்சை பெறலாம். மேலும் அரிய வகை சிகிச்சை, அறுவை சிகிச்சை வேண்டுவோர் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரையிலும் காப்பீடு மூலம் சிகிச்சை பெறலாம். அதற்காக, புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் இணைந்துள்ள 1,169 மருத்துவமனைகளில் 203 வகை சிகிச்சைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசு ஊழியர்களுக்கு புதிய சலுகையை தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு கரோனா சிகிச்சை செலவு ரூ.10 லட்சத்திற்கு மேல் உயர்ந்தால் அரசே வழங்கும் என்றும் காப்பீடு திட்டத்தில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஒய்வூதியதாரர்கள் இலவசமாக சிகிச்சை பெறலாம் என்றும் அறிவித்துள்ள தமிழக அரசு, கூடுதல் சிகிச்சை செலவுக்காக ரூ.1 கோடியை சுழல் நிதியாக விடுவித்துள்ளது. அதே நேரத்தில், வாரியம், பல்கலைக்கழகம், போக்குவரத்து கழகம் உள்ளிட்ட பொது நிறுவன ஊழியர்களுக்கு இது பொருந்தாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் பொது நிறுவன ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in