கைரேகை சிக்கல் இருந்தாலும் ரேஷன் பொருள் வழங்க வேண்டும்!

பொதுமக்களுக்கு தமிழக அரசு இனிப்பான செய்தி
நியாயவிலைக் கடை
நியாயவிலைக் கடைhindu கோப்பு படம்

“கைரேகை பதிவு செய்வதில் பிரச்சினை ஏற்படும்பட்சத்தில், குடும்ப அட்டை எண்ணை பதிவுசெய்து அத்தியாவசியப் பொருட்களை தங்குதடையின்றி வழங்க வேண்டும்” என, அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருள்களை நியாயவிலைக் கடைகளில் வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். ஸ்மார்ட் கார்டு அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், குடும்ப தலைவர் அல்லது உறுப்பினர்கள் நேரில் வந்து தங்களது கைரேகையை பதிவுசெய்து, பொருட்களை வாங்கும் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டது. ஆனால், பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது.

குடும்பத்தில் உள்ள சிறுவர்கள், வயதானவர்கள் நியாயவிலைக் கடைகளுக்கு வரும்போது, அவர்களது கைரேகைகள் சரியாக பதிவது இல்லை. இதன்காரணமாக அவர்கள் பொருட்களை வாங்க முடியாத சூழல் ஏற்படுகிறது. கைரேகைப் பதிவை புதுப்பித்து வருமாறு நியாயவிலைக் கடை ஊழியர்கள் அலைக்கழிக்கும் சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதோடு, காலையில் பொருள் வாங்கச் சென்றால் மாலையில் வாருங்கள் என்றும் மாலையில் சென்றால் நாளை வாருங்கள் என்று சொல்லும் நிகழ்வுகள் நியாயவிலைக் கடைகளில் தினந்தோறும் நடக்கின்றன.

இந்நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு தடையின்றி அத்தியாவசியப் பொருட்கள் வழங்க அனைத்து நியாயவிலைக் கடை விற்பனையாளர்களுக்கும் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. அதில், “குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும்போது, விற்பனை முனைய இயந்திரத்தில் கைரேகை பதிவுசெய்வதில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படுவதால் நியாயவிலைக் கடை செயல்பாடுகள் குறைந்துள்ளன. QR குறியீடு அங்கீகரிக்கப்படாத நேர்வுகளில் விற்பனை முனைய இயந்திரத்தில் குடும்ப அட்டை எண்ணை பதிவுசெய்து, உரிய பதிவேட்டில் ஒப்புதலைப் பெறவேண்டும். குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களைத் தடையின்றி உடனடியாக வழங்கவேண்டும்” என அறிவுறுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in