ராமஜெயம் கொலை வழக்கில் நல்ல தீர்வு கிடைக்கும் : அமைச்சர் கே.என்.நேரு

ராமஜெயம் கொலை வழக்கில் நல்ல தீர்வு கிடைக்கும் : அமைச்சர் கே.என்.நேரு

"சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் நல்ல தீர்வு கிடைக்கும்" என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறுகையில், " தமிழகத்தில் தற்போது சொத்து வரி உயர்வு மத்திய அரசின் வழிகாட்டுதல் படி உயர்த்தப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சிக்காலத்தில் வரி உயர்வு சம்பந்தமாக அமைக்கப்பட்ட குழு பரிந்துரைத்ததை விட குறைவாக வரி விதிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் வரி உயர்வு குறைவு" என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், "மக்களின் திட்டங்களுக்காக இதுபோன்ற வரிகள் போடப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வின் மூலம் 83 சதவீத மக்களுக்கு 25 முதல் 50 சதவீதம் மட்டுமே வரி உயர்த்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 17 சதவீத பேருக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதுவும் வியாபார பகுதி மற்றும் வணிக நோக்குடன் உள்ள கட்டிடங்கள், தொழிற்சாலை கட்டிடங்களுக்கு தான் 100 சதவீதம் 150 சதவீதம் வரி உயர்த்தப்பட்டுள்ளது " என்று கூறினார்.

"அதிலும் 1.7 சதவீதம் பேருக்கு 200 சதவீதம் வரி உயர்த்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த வரி உயர்வை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அரசியல் கட்சியினர் தான் இதை பெரிதாக்குகின்றனர். 15 மாநிலங்களில் வரி உயர்த்தப்பட்டுள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் வரி உயர்த்தப்பட்டுள்ளது. அவர்களும் வரி உயர்த்தக் கூடாது என சொல்கின்றனர். திமுக தலைமையிலான அரசு மக்கள் வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது " என்றார். "சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கின் விசாரணை தற்போது கொங்கு மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் நல்ல தீர்வு கிடைக்கும்" என்று அவர் கூறினார். நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேந்திரன், எம்பி எஸ். ஆர். பார்த்திபன், மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in