
தமிழகத்தில் ஜூலை 14 வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மேற்குதிசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழைபெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஜூலை 14 -ம் தேதிவரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன், மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், ‘மன்னார் வளைகுடா, தென் தமிழகக் கடலோரப் பகுதிகள், குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல், ஆந்திரக் கடலோரப் பகுதிகள் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். இதனால் இந்தப் பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம்’ என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஏற்கெனவே மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களும் அவசரமாகக் கரை திரும்பி வருகின்றனர்.