`அவர்கள் 90%; தமிழர்கள் ஒரு சதவீதம் கூட தேர்வாகவில்லை'- வேதனை தெரிவித்த ரயில்வே அதிகாரி

`அவர்கள் 90%; தமிழர்கள் ஒரு சதவீதம் கூட தேர்வாகவில்லை'- வேதனை தெரிவித்த ரயில்வே அதிகாரி

"ரயில்வே பணியில் 90 சதவீதம் பேர் பிஹார், உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்களே உள்ளனர். தமிழகத்தில் குறைந்த சதவீகிதத்தில் கூட யாரும் தேர்வாவதில்லை என்பது வருத்தமளிப்பதாக உள்ளது" என்று ரயில்வே பாதுகாப்பு படை உதவி முதன்மை ஆணையர் லூயிஸ் அமுதன் வேதனை தெரிவித்தார்.

ரயிலில் பயணம் மேற்கொள்ளும் கல்லூரி மாணவர்கள், ரயில்கள், ரயில் நிலைய வளாகம் மற்றும் நடைமேடையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவர்கள், ரயில்வே காவல் துறை கண்காணிப்பாளர் அதிவீரபாண்டியன் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை உதவி முதன்மை ஆனையர் லூயிஸ் அமுதன் மற்றும் கல்லூரி முதல்வர் ஆர்.கஸ்தூரி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய சென்னை ரயில்வே துனை கண்காணிப்பாளர் முத்துக்குமார், "படிக்கும் போது செய்யும் சிறு தவறுகள் கூட பிற்காலத்தில் உங்களது வாழ்நாள் முழுக்க முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கக்கூடும். நற்செயல்கள் மூலம் மட்டுமே உங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்கள் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்தால் அவர்களுக்கு வேலை கிடைக்காமல் வாழ்க்கையே கேள்வி குறியாகிவிடும்" என்றார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன் ரயில் விபத்தில் உயிரிழந்த மாணவர் வெங்கடேசனின் தாயார் தேவி பேசுகையில், "தனது மகனின் மரணத்திலிருந்து இன்னும் நாங்கள் மீளவில்லை. என்னைபோல உங்களை பெற்றவர்களும் வேதனைபடக்கூடாது. இக்கல்லூரியில் தனது மகன் மட்டுமே ரயில் பயணத்தில் இறந்த கடைசி உயிராக இருக்கட்டும். இனி யாரும் இதுபோன்று ஆபத்தான பயணங்களில் ஈடுபட வேண்டாம்" என கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டார்.

இவரை தொடர்ந்து பேசிய சென்னை ரயில்வே கோட்ட கண்காணிப்பாளர் அதிவீரபாண்டியன், "சென்னையின் பழமையான கல்லூரி பச்சையப்பன் கல்லூரி. பல மேதைகளை உருவாக்கிய கல்லூரியில் படிப்பதை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மாணவர்கள் தங்கள் குடும்ப பின்னணியை அறிந்து படிப்பில் நாட்டம் செலுத்த வேண்டும்" என்று கூறினார்.

ரயில்வே பாதுகாப்பு படை உதவி முதன்மை ஆணையர் லூயிஸ் அமுதன் பேசுகையில், "எந்த இலக்கிற்காக படிக்கிறோம் என்பதை கல்லூரியிலேயே முடிவெடுத்துள்ளுங்கள். அடிப்படை தகுதி 10-ம் வகுப்பு என இருந்த போதும் மத்திய ரயில்வே அரசு பணிகளில் 90 சதவீதம் பிஹார், உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்துதான் பணியில் சேர்கின்றனர். 1 சதவீதம் கூட தமிழகத்தில் தேர்வாவதில்லை. குறைந்தபட்சமாக அரசு தேர்வுகளில் விண்ணப்பிக்ககூட யாரும் முன்வரவில்லை என்பது கோபம் கலந்த வருத்தமளிக்கிறது. தமிழகத்தை போல தரமான கல்வி பிற மாநிலங்களில் கிடைக்காத போதும் கடின உழைப்பின் மூலம் அவர்கள் தேர்வாகின்றனர்" என தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in