சுகாதாரத் துறைச் செயலாளர் பதவியிலிருந்து ராதாகிருஷ்ணன் மாற்றம்: பின்னணி என்ன?

சுகாதாரத் துறைச் செயலாளர் பதவியிலிருந்து ராதாகிருஷ்ணன் மாற்றம்: பின்னணி என்ன?

தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பதவியிலிருந்து ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டுள்ளார். கரோனா பரவலுக்கு எதிரான நடவடிக்கைகளைச் சிறப்பாக மேற்கொண்டதாக பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்ற ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டதன் பின்னணி குறித்து முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக சுகாதாரத் துறைச் செயலாளராக முந்தைய அதிமுக ஆட்சியிலேயே நியமிக்கப்பட்டவர் ராதாகிருஷ்ணன். பீலா ராஜேஷ் இடையில் சிலகாலம் இந்தப் பொறுப்பில் இருந்தார். பின்னர் பீலா ராஜேஷ் மாற்றப்பட்டு, மீண்டும் ராதாகிருஷ்ணன் வசமே இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. திமுக ஆட்சியிலும் ராதாகிருஷ்ணனே சுகாதாரத் துறை செயலாளராகத் தொடர்ந்துவந்தார்.

இந்நிலையில் இன்று ராதாகிருஷ்ணனை, கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்பு செயலாளராகத் தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. புதிய சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளராக செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

பின்னணி என்ன?

சுகாதாரத் துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் சிறப்பாகச் செயல்படுவதாக பொதுமக்கள் மத்தியில் பேச்சு உண்டு. கரோனா இரண்டாவது அலையையும் அவர் மிகச் சிறப்பாகக் கையாண்டார். அப்படியிருந்தும் அவர் மாற்றப்பட்டது மக்கள் மத்தியிலேயே பேசு பொருளாகியிருக்கிறது. அதன் பின்னணியில் வெவ்வேறு ஊகங்கள் முன்வைக்கப்படுகின்றன.

அண்மையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சுகாதாரத் துறையில் முறைகேடுகள் நடப்பதாகச் சில தகவல்களை எடுத்துவைத்தார். இரண்டாம்கட்ட அதிகாரிகள் மூலமே அந்தத் தகவல்கள் அண்ணாமலைக்குக் கிடைத்ததாகவும், ராதாகிருஷ்ணனால் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அதனால்தான் அவர் மாற்றப்பட்டுள்ளார் என்று ஒருதரப்பு கூறுகிறது.

ஆனால் ஆளும்கட்சியின் முக்கியப் புள்ளிகள் சிலரோ, “தமிழகம் முழுவதும் 37 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். மாற்றுத்திறனாளிகள் நலத் துறை ஆணையராக ஜெசிகா, போக்குவரத்துத் துறை ஆணையராக நிர்மல்குமார், ஊரக வளர்ச்சித் துறை இயக்குநராக தாரேஸ் அகமது ஆகியோர் பழைய பணியிடத்தில் இருந்து மாற்றித்தான் நியமிக்கப்பட்டுள்ளனர். இவவளவு ஏன் தென்காசி, திருச்சி, இராமநாதபுரம், தர்மபுரி ஆட்சியாளர்களும் மாற்றப்பட்டுள்ளனர். இது வழக்கமான நடைமுறைதான். ராதாகிருஷ்ணன் இன்னொரு துறைக்கும் செயலாளராகத்தானே போயிருக்கிறார். கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்பு என்பது மக்களோடு இன்னும், இன்னும் அவர் தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்ளக்கூடிய துறைதான். நல்ல துறை என்பதால்தான் அவருக்கு அது ஒதுக்கப்பட்டுள்ளது” என்கிறார்கள்.

எது எப்படியோ, கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில் ராதாகிருஷ்ணனின் பதவி மாற்றம் பேசுபொருளாவதும் தவிர்க்க முடியாததுதான்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in