வினாத்தாள் லீக் விவகாரம்: தி.மலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடை நீக்கம்

வினாத்தாள் லீக் விவகாரம்: தி.மலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடை நீக்கம்
திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள் செல்வம்

திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில், திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள் செல்வத்தை பணியிடை நீக்கம் செய்து பள்ளிக் கல்வித் துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதற்கட்ட திருப்புதல் தேர்வு, கடந்த 9-ம் தேதி தொடங்கியுள்ளது. தேர்வு தொடங்கிய நாள் முதலே, பல பாடங்களுக்கான தேர்வுகளின் கேள்வித்தாள்கள் முன்கூட்டியே சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின. இந்த விவகாரம் தொடர்பாக கல்வித் துறை அதிகாரிகள், நேரடியாகவே திருவண்ணாமலை மாவட்டத்தில் விசாரணை நடத்தினர்.

அப்போது, திருவண்ணாமலை மாவட்டம், போளூர் ஆக்சிலியம் மெட்ரிகுலேசன் பள்ளி, வந்தவாசி ஹாசினி இன்டர்நேஷனல் மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளி ஆகிய 2 பள்ளிகளில் இருந்துதான் கேள்வித்தாள்கள் கசிந்துள்ளன என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த 2 பள்ளிகள் மீதும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் அறிவித்துள்ளார். அதேநேரத்தில் தேர்வுத் துறையின் விதிமுறைகளை கடைபிடிக்காத, துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

இதனிடையே, தொடர்ந்து வினாத்தாள்கள் வெளியாகி வரும் நிலையில் ‘10,12-ம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கு முக்கியத்துவம் கிடையாது’ என தேர்வுத் துறை அறிவித்துள்ளது. ‘திருப்புதல் தேர்வு மதிப்பெண் கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது, மாணவர்களை பொதுத்தேர்வு எழுதத் தயார்படுத்தவே திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது’ என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இச்சூழ்நிலையில், நாளை நடைபெற உள்ள பிளஸ் 2 திருப்புதல் தேர்வின் இயற்பியல் பாட வினாத்தாளும் முன்கூட்டியே வெளியாகியுள்ளது. ஏற்கெனவே உயிரியல், வணிகவியல், வணிக கணிதம் வினாத்தாள்கள் வெளியான நிலையில், மேலும் ஒரு வினாத்தாள் கசிந்தது. வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியானாலும், அதே வினாத்தாள் முறையில் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள் செல்வத்தை பணியிடை நீக்கம் செய்து பள்ளிக் கல்வித் துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தேர்வு நாளன்று கேள்வித்தாள்களை தராமல், ஒரு வாரத்துக்கு முன்கூட்டியே பள்ளிகளுக்கு கொடுத்து விதிமீறலில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.