தேர் விபத்தில் சிக்கிய பெண் உயிரிழப்பு: புதுகையில் சோகம்!

கவிழ்ந்து கிடக்கும் பிரகதாம்பாள் தேர்
கவிழ்ந்து கிடக்கும் பிரகதாம்பாள் தேர்

புதுக்கோட்டையில் நடந்த தேர் விபத்தில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் உள்ள பழமையான பிரகதாம்பாள் உடனுறை கோகர்ணேஸ்வரர் கோயில் தேரோட்டம் ஜூலை 31-ம் தேதியன்று நடந்தது. அப்போது அலங்கரிக்கப்பட்ட தேரில் பிரகதாம்பாள் எழுந்தருளப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது.

தேரோட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பிரகதாம்பாள் வீற்றிருந்த தேரானது முன்புறமாக தலைக் குப்புற சாய்ந்தது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பேருக்கு அடியில் சிக்கிக்கொண்டனர்.

அதில் தேரோட்டிகளான புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜி.ராஜேந்திரன், பி.வைரவன் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் காயம் பலத்த காயமடைந்த நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு அரசின் சார்பில் தலா ஐம்பதாயிரம் ரூபாய் நிதி உதவியும் வழங்கப்பட்டது அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தேரோட்டும் பணியில் ஈடுபட்ட புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜேந்திரன், வைரவன் ஆகியோர் மீது திருக்கோகர்ணம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரிமளத்தைச் சேர்ந்த ராஜகுமாரி (54) இன்று உயிரிழந்தார்.

இவர் புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் வசித்து வந்தார். அன்றைய தினம் நடந்த தேரோட்டத்தில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தார். தேருக்கு முன்புறமாக அருகில் நின்றுகொண்டிருந்ததால் தேர் சாய்ந்ததில் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் கடந்த ஏழு நாட்களாக சிகிச்சை பெற்று வந்தவர் இன்று காலை உயிரிழந்தார். இதனால் இவரது குடும்பத்தினரும், புதுக்கோட்டை மக்களும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in