துப்பாக்கி குண்டு பாய்ந்து சிகிச்சை பெற்றுவந்த சிறுவன் உயிரிழப்பு: நடவடிக்கை கோரி உறவினர்கள் போராட்டம்

3 மணி நேரத்துக்குப் பின்னர் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது
துப்பாக்கி குண்டு பாய்ந்து சிகிச்சை பெற்றுவந்த சிறுவன் உயிரிழப்பு: நடவடிக்கை கோரி உறவினர்கள் போராட்டம்

புதுக்கோட்டை அருகே, ராணுவ வீரர்கள் மேற்கொண்ட துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது, துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்த சிறுவன் இன்று உயிரிழந்தான். இதையடுத்து அச்சிறுவனின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் உதவித்தொகையை அறிவித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். எனினும், அச்சிறுவனின் உறவினர்களும் ஊர்க்காரர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை அருகே நார்த்தாமலை பகுதியில் உள்ள பசுமலைப்பட்டியில், தமிழகக் காவல் துறைக்குச் சொந்தமான துப்பாக்கி சுடும் பயிற்சித் தளத்தில், டிச.30-ல் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, பயிற்சி தளத்திலிருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வீட்டில் இருந்த சிறுவன் புகழேந்தியின் (11) தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த சிறுவனுக்கு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. பின்னர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். எனினும், சிகிச்சை பலனின்றி இன்று அச்சிறுவன் உயிரிழந்தான்.

இதையடுத்து, அச்சிறுவனின் குடும்பத்தினருக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு அறிவித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். எனினும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி நார்த்தாமலை அருகே அச்சிறுவனின் உறவினர்களும் ஊர்க்காரர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், திருச்சி - புதுக்கோட்டை சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதையடுத்து சிறுவனின் உறவினர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தப் பயிற்சித் தளத்தில், துப்பாக்கி சுடும் பயிற்சிகள் மட்டுமல்லாமல் மாநில அளவிலும், தேசிய அளவிலும் துப்பாக்கி சுடும் போட்டிகளும் நடத்தப்படும். பல்வேறு ரைஃபிள்ஸ் சங்கத்தினரும் இங்கு போட்டிகளை நடத்துவதுண்டு. இங்கு துப்பாக்கிக் குண்டு வெளியில் செல்லாமல் தடுக்கும் வகையில் முகடு ஒன்று உண்டு. இந்நிலையில் முகட்டைத் தாண்டி ஒன்றரை கிலோமீட்டர் தள்ளி இருக்கும் வீட்டில் இருக்கும் சிறுவனின் தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது எப்படி எனும் கேள்வி இன்னமும் நீடிக்கிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. வருவாய்க் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார். ஆட்சியருக்கும் அறிக்கை அளிக்கப்பட்டது. விசாரணையில், அன்றைய தினம் தாங்கள் பயிற்சி முடித்து சென்ற பின்னர் மத்திய மண்டலக் காவல் துறையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டதாக மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் கூறியிருப்பதாகத் தெரிகிறது. இதையடுத்து, எந்தப் பகுதியிலிருந்து குண்டு பாய்ந்தது என்பதை அறிய, தொழில்நுட்பக் குழுவினருடன் வருவாய்க் கோட்டாட்சியர் சம்பவ இடத்துக்குச் சென்று மேலும் விசாரணை நடத்தியிருக்கிறார். சிறுவனின் தலையிலிருந்து அகற்றப்பட்ட துப்பாக்கி குண்டுதான் முக்கியத் தடயம். யார் தரப்பிலிருந்து அது வந்தது என்பதை விரைவில் கண்டறிய வேண்டும் என்று நார்த்தாமலை பகுதி மக்கள் வலியுறுத்தியிருக்கின்றனர். துப்பாகிச் சுடும் பயிற்சி தளம் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கிறது. அதை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் அவர்கள் கோரியிருக்கின்றனர். அரசு அளித்திருக்கும் இழப்பீடு போதாது என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தியிருக்கின்றனர்.

சிறுவன் மரணமடைந்ததைத் தொடர்ந்து தஞ்சாவூர் உள்ளிட்ட மேலும் சில இடங்களில் போராட்டம் நடைபெறும் சூழல் உருவானதால், அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடைசியாகக் கிடைத்த தகவலின்படி, போராட்டம் நடத்தியவர்களுடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன், உடன்பாடு ஏற்பட்டதால், 3 மணி நேரம் கழித்து போராட்டம் கைவிடப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in