சர்ச்சை: புதுச்சேரி அரசு விழாவில் தரையில் அமர வைக்கப்பட்ட பழங்குடி மக்கள்!

தரையில் அமர வைக்கப்பட்ட பழங்குடி மக்கள்.
தரையில் அமர வைக்கப்பட்ட பழங்குடி மக்கள்.

புதுச்சேரியில் நடைபெற்ற அரசு விழாவில் பழங்குடியின மக்கள் தரையில் அமர வைக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் குந்தியில் பழங்குடியினர் கவுரவ தின விழா கொண்டாட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த விழா காணொலி காட்சி மூலம் புதுச்சேரி கம்பன் கலையரங்கில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அம்மாநில ஆதி திராவிடர் நலன் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் நடைபெற்ற நிகழ்வில் துணை நிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பழங்குடியினர் தலைவர் பகவான் பிர்சா முண்டா உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு, உறுதிமொழி ஏற்கப்பட்டது.

துணை நிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி
துணை நிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி

கம்பன் கலையரங்கில் பழங்குடியினர் கவுரவ தினவிழா நடந்தது. இந்த விழாவுக்கு வந்த பழங்குடியின மக்கள் அமர போதிய இருக்கை வசதி ஏற்பாடு செய்யப்படவில்லை. இதனால், அவர்கள் கம்பன் கலையரங்கில் தரையில் அமர வைக்கப்பட்டனர். இதைக் கண்ட பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுத்தனர்.

இதையடுத்து, அதிகாரிகள் நாற்காலிகளைக் கொண்டு வந்து அங்கு போட்டு அவர்களை அமரும்படி கூறினர். இந்த விவகாரம் தொடர்பாக அங்கிருந்தோர் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி கேள்வி எழுப்பத் தொடங்கினர்.

அதிருப்தி தெரிவித்த பழங்குடி மக்கள்
அதிருப்தி தெரிவித்த பழங்குடி மக்கள்

மேலும், துணை நிலை ஆளுநர் தமிழிசையிடம் சென்று தங்கள் குறைகளைத் தெரிவித்தனர். இந்நிலையில், பழங்குடியினர் தரையில் அமரவைக்கப்பட்ட விவகாரத்தில், விழா ஏற்பாட்டில் சம்பந்தப்பட்டுள்ள துறைத் தலைவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.

அதில், கூடுதலாக வந்த பழங்குடியின மக்களுக்கு உரிய இருக்கை வசதிகள் செய்து தரப்படவில்லை. அவர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து தனது அதிருப்தியை ஆளுநர் தமிழிசை வெளிப்படுத்தியுள்ளார்.

பழங்குடியின மக்களை கவுரவிக்கவும், புதுச்சேரி அரசு சார்பில் பல நலத்திட்டங்கள் வழங்கவும், அவர்களைப் பாராட்டவும் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் அவர்கள் அமர்வதற்கு போதிய இருக்கை வசதி செய்து தரப்படவில்லை என்பது கண்டனத்துக்குரியது என தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in