
கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதி பெறாத படகில் கடலுக்குள் சென்ற சுற்றுலா பயணிகள் காயமடைந்த நிலையில், புதுச்சேரியில் சுற்றுலாப் படகுகளை இயக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கடலோரக் காவல் படை அறிவித்துள்ளது
புதுச்சேரியில் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் இருந்து கடல் மற்றும் முகத்துவார பகுதிகளில் சிறிய படகுகளில் சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்ல தனியார் படகுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சிலர் அனுமதி பெறாமலும் சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்வது வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு படகில் சென்ற சுற்றுலா பயணிகள் கடலில் விழுந்து காயமடைந்தனர்.
இந்நிலையில் கடலோர காவல்துறை அதிகாரிகள் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர், கடலோரக் காவல் பிரிவு சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகளுக்காக இயக்கப்படும் படகுகளில், போதிய பாதுகாப்பு மற்றும் அதற்கான உரிமம், உறுதித் தன்மை சான்றிதழ் பெறாமல் படகுகள் இயக்கப்படுகின்றன. இதனால், சுற்றுலாப் பயணிகளின் உயிருக்கு ஆபத்தான சூழல் ஏற்படுகிறது. எனவே, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் மற்றும் கடலோரக் காவல் கண்காணிப்பாளா் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, யாரும் சுற்றுலாப் படகுகளை இயக்க வேண்டாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடா்பாக, மறு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரே, படகுகளை இயக்க வேண்டும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.