ஊரடங்கின் போது போலீஸார் எப்படி நடந்துகொள்ள வேண்டும்

வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
ஊரடங்கின் போது  போலீஸார் எப்படி நடந்துகொள்ள வேண்டும்

தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு நேர ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும் காவலர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நடைமுறைகள் குறித்து தமிழக காவல்துறை தலைமையகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது

தமிழகத்தில் டெல்டா மற்றும் ஒமைக்ரான், கரோனா தொற்றுப் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கையும், ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கையும் அமல்படுத்தி இருக்கிறது தமிழக அரசு.

அதனடிப்படையில் காவல்துறையினர் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கின்போது பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு சமயங்களில் பொதுமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நடைமுறைகள் தொடர்பான அறிவிப்பை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, மத்திய - மாநில அரசுத் துறை அதிகாரிகள், ஊழியர்கள், நீதிமன்றம் மற்றும் நீதித்துறை தொடர்பான பணிகளில் ஈடுபடுவோர், உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிவோர், வங்கி, பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட அலுவல் காரணங்களுக்காக பயணம் மேற்கொள்வோரின அடையாள அட்டையை பார்வையிட்டு அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், அத்தியாவசிய பணிகளான பால் விநியோகம், மின்சாரம், தகவல் தொடர்பு, தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த அனைத்து சேவைகள், ஏடிஎம் மையங்கள், சரக்கு மற்றும் எரிபொருள் வாகனங்களில் பணிபுரிவோரை அடையாள அட்டையை பார்வையிட்டு பயணம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்.

மேலும், உற்பத்தி தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப சேவை மையங்கள் உள்ளிட்ட நிறுவன பணியாளர்களையும் அடையாள அட்டையை பார்வையிட்டு அனுமதிக்க வேண்டுமென்றும், மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் சரக்கு வாகனங்கள் உட்பட பல்வகை சரக்கு வாகனங்களில் கொண்டு செல்லப்படும் விவசாய விளை பொருட்களான காய்கறி, பழங்கள், இறைச்சி, முட்டை போன்றவற்றை எக்காரணம் கொண்டும் தடுத்து நிறுத்தாமல் உடனடியாக செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

09.01.2022 அன்று முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ள போது மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப் பணிகளுக்கான தேர்வுகள் நடக்க உள்ளதை கவனத்தில் கொண்டு மத்திய - மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் பல்வேறு நிறுவன வேலைவாய்ப்புக்காக நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளச் செல்வோரை தடுக்காமல் உரிய அழைப்புக் கடிதத்தை பார்வையிட்டு உடனடியாக அனுப்ப வேண்டும்.

ஞாயிறு முழு ஊரடங்கின் போது உணவகங்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைகள் அனுமதிக்கப் பட்டுள்ளதால், உணவு டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவன பணியாளர்களை அரசால் வழங்கப்பட்டுள்ள நேரங்களில் செயல்பட அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சொந்த மற்றும் வாடகை வாகனங்களில் விமானம், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு செல்லும் பயணிகளையும், அங்கிருந்து வீடுகளுக்கு திரும்பும் பயணிகளையும் விசாரித்து அனுப்ப வேண்டும் எனவும், கிராமப் பகுதிகளில் விவசாயிகள் விவசாய பணிகள் செல்வதை தடுக்கக்கூடாது எனவும் அவசர காரணங்களுக்காக வெளியூர் செல்வோரையும், பணி முடிந்து சொந்த ஊர் திரும்புவோரையும் அனுமதிக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரவு நேர ஊரடங்கு வாகன சோதனையின் போது வாகன ஓட்டிகளிடம் கனிவாகவும், மனித நேயத்துடன் காவல் துறையினர் நடந்துகொள்ள வேண்டும் எனவும், வாகனத்தை சோதனை செய்ய வேண்டியிருந்தால் காவலர்கள் கையுறை அணிந்து சோதனையில் ஈடுபட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அடிக்கடி காவல் துறையினர் தங்கள் கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்து நிலையான வழிகாட்டு நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் எனவும், இரவு வாகன சோதனையை வெளிச்சம் உள்ள இடங்களில் நடத்த வேண்டும் எனவும், காவலர்கள் தடுப்புகள் அமைத்து ஒளிரும் மேல் சட்டை அணிந்து பாதுகாப்பாக இரவு நேரங்களில் பணியாற்ற வேண்டும் எனவும் தமிழக காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.