`மதுரை ஆதீனத்தின் உயிருக்கு ஆபத்து; துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்கவும்'

காவல் துறை ஆணையரிடம் மனு அளித்த வழக்கறிஞர்கள்
`மதுரை ஆதீனத்தின் உயிருக்கு ஆபத்து; துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்கவும்'

மதுரை ஆதீனத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் முத்துக்குமார், நீலமேகம் உள்ளிட்டோர் மாநகர காவல் ஆணையர் செந்தில் குமாரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், ”மதுரை ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ ஹரிகர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் 293-வது குரு மகா சன்னிதானமாக பதவி ஏற்று செயல்படுகிறார். சமீபத்தில் தருமபுர ஆதீனம் பல்லாக்கு தூக்குவது தொடர்பான அரசின் தடையையும், இறை வணக்கத்திற்கு எதிரானவர்களை கண்டித்தும், தொடர்ந்து பேசி வருகிறார். இதனால் இந்து விரோத சக்திகளால் அவருக்கு ஆபத்து நிகழும் சூழல் உள்ளது.

ஆதீனத்திற்கு சொந்தமான கடைகள், சொத்துகள் மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ளன. அதிலுள்ள வாடகை மற்றும் குத்தகை பாக்கியை வசூலிக்க மதுரை ஆதீனம் தீவிரம் காட்டியுள்ளார். வாடகை பாக்கி வைத்துள்ளவர்கள் ஆதீனத்திற்கு எதிராக தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இது தொடர்பாக மதுரை ஆதீனமடத்திற்கு வழக்கறிஞர்கள் குழு நேரில் சென்று ஆய்வு செய்தபோது, மடத்திற்கும், மடத்தைச் சார்ந்தவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் இருப்பது தெரியவந்தது.

இது சம்பந்தமாக மதுரை ஆதீனத்தை நேரில் சந்தித்து உண்மை நிலையை விசாரித்தபோதும், இந்து விரோத சக்திகள் மூலம் தனது உயிருக்கும், ஆதீன மடத்திற்கும் பாதுகாப்பற்ற நிலை இருப்பதாக தெரிவித்தார். எனவே, அவரது உயிருக்கும், உடைமைக்கும் தகுந்த பாதுகாப்பு அளிப்பதோடு, துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பும் வழங்கவேண்டும். சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

மதுரை ஆதீனத்திற்கு எஸ்ஐ ஒருவர் தலைமையில் இரு போலீஸார் அடங்கிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்குவது குறித்து அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை ஆணையர் கூறினார் என்றும் இருப்பினும், ஆதீனம் இந்திய பிரதமர், உள்துறை அமைச்சரை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார் என்றும் வழக்கறிஞர் முத்துக்குமார் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in